நந்தனார் விவகாரத்தில் திருப்புன்கூர் கிராமத்தில் வழிபட்டதை சிதம்பரம் என்று பொய் வதந்தியை பரப்புவது மலிவான அரசியல் மட்டுமல்ல, ஹிந்துக்களின் மீதான வெறுப்பின் உச்சம் என்று நாராயணன் திருப்பதி திருமாவளவனுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருமாவளவன் விமர்சனம்:
நந்தனார் பிறந்த ஊர் ஆதனூரில் 100 பறையர்களுக்கு பூணூல் அணிவிக்காறாராம் ஆளுநர் சனாதனி ஆர்என்ரவி அவர்கள். இது மேன்மைப் படுத்துகிறோம் என்னும் பெயரில் உழைக்கும் மக்களை இழிவுப் படுத்துவதாகும். இதுதான் சனாதனம் ஆகும்.
இதன்மூலம் பூணூல் அணியாத மற்றவர்கள் இழிவானவர்கள் என்கிறாரா ஆளுநர்?பூணூல் அணிவிக்கப்பட்ட ஆதிதிராவிடர்களை கோவில் பூசாரிகளாக்குவாரா ஆளுநர்?
அத்துடன், ஆளுநர் அவர்கள் நந்தன் வழிபட்டதால் நடராசர் கோவிலில் அடைக்கப்பட்டுள்ள சுவரைத் தகர்த்து வாசலைத் திறந்து விட வேண்டுகிறோம்.
நாடாண்ட மன்னன் நந்தனை மாடுதின்னும் புலையன் என இழிவுப்படுத்தும் பெரிய புராணக் கட்டுக்கதைகளைப் புறந்தள்ளுவோம் என்று தெரிவித்து இருந்தார்.
திருமாவளவனின் இந்த கருத்திற்கு பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்..
நந்தன் வழிபட்டதால் நடராசர் கோவிலில் அடைக்கப்பட்டுள்ள சுவரை தகர்த்து வாசலைத் திறந்து விட வேண்டுகிறோம் என்று தொல்.திருமாவளவன் அவர்கள் கூறியுள்ளது மீண்டும் ஒரு கட்டுக் கதையினை சொல்லி மக்களை குழப்பும் ஹிந்து விரோத செயலே.
நந்தன் வழிபட்டது திருப்புன்கூர் சிவலோகநாதர் கோவில் என்பது உலகறிந்த உண்மை. அப்படியிருக்க சிதம்பரம் நடராஜர் கோவிலில் நந்தன் வழிபட்டது போன்ற மாயையை உருவாக்குவதும், அங்கு திருப்பணி முடிந்து அமைக்கப்பட்ட சுவரை தீண்டாமை சுவர் என்று வதந்தியை பரப்புவது மலிவான அரசியல் மட்டுமல்ல, ஹிந்துக்களின் மீதான வெறுப்பின் உச்சம்.
தொடர்ந்து ஹிந்து மத இதிகாசங்களை பரிகாசம் செய்வது, அவமானப்படுத்துவது, ஆங்கிலேயர்கள் உண்மைக்கு புறம்பாக எழுதிய நூல்களை ‘மனு ஸ்ம்ரிதி’ என்று பொய் சொல்லி அதை தீயிட்டு கொளுத்துவது என்று இல்லாததை இருப்பது போல் சொல்லி மக்களை தூண்டி விட்டதை போல் நந்தனார் விவகாரத்தில் திருப்புன்கூர் கிராமத்தில் வழிபட்டதை சிதம்பரம் என்று பொய் சொல்லி தூண்டி விடுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இது போன்ற ஹிந்து விரோத செயல்பாடுகளை தவிர்த்து மக்கள் நலன் குறித்த நடவடிக்கைகளில் திரு. திருமாவளவன் அவர்கள் ஈடுபட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
+ There are no comments
Add yours