தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று தொடங்கி நடைபெற்றது. இந்த கூட்டத்தொடரானது வரும் 11-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த நிலையில், இன்று காலை சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகரை அதிமுக எம்எல்ஏக்கள், எஸ்.பி வேலுமணி உள்ளிட்டோர் சந்தித்தனர்.
இந்த சந்திப்பின் போது, எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கையில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு பதிலாக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமாரை அமர வைக்க வேண்டும் என வலியுறுத்தினர். அதிமுக உறுப்பினர்கள் சபாநாயகரை சந்தித்து கோரிக்கை வைத்த நிலையில், இருக்கையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கையில் ஓ.பன்னீர்செல்வம் தான் அமர்ந்திருந்தார். ஆர்பி உதயகுமார் உறுப்பினர்கள் இருக்கையில் அமர்ந்து இருந்தார்.
இந்த நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எஸ்.பி.வேலுமணி, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பேச வாய்ப்பு கிடைப்பதில்லை; மூன்று நாட்கள் தான் சட்டமன்ற கூட்டம் நடத்தப்படும். தமிழக பிரச்சனைகளை பேச குறைந்தது ஒரு வாரமாவது சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடத்த வேண்டும் என அறிவுறுத்தினோம், அதையும் ஏற்கவில்லை.
பேசுவதற்கு பிரச்னை ஒன்றும் இல்லை என்பது போல் கூறுகின்றனர். எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி விவகாரத்தில் சபாநாயகர் எங்கள் கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை; சபாநாயகர் போக்கு தன்னிச்சையாக உள்ளது. திமுக தேர்தல் வாக்குறுதியில் 100 நாட்கள் சட்டமன்றம் நடக்கும் என்றார்கள், இந்த தேர்தல் வாக்குறுதியாவது நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours