தேசிய கீதம் குறித்து ஆளுநர் புகார் தெரிவித்த நிலையில் சட்டப்பேரவையின் மரபுகள் குறித்த சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்துள்ளார். இந்த ஆண்டுக்கான சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று (திங்கள்கிழமை) கூடிய நிலையில், தமிழக அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி புறக்கணித்தார்.
முன்னதாக, சில நிமிடங்கள் மட்டுமே உரை நிகழ்த்திய ஆளுநர் ரவி, தனது உரையின்போது, “நான் திரும்பத் திரும்ப விடுக்கும் கோரிக்கையும், அறிவுரையும் இதுதான். தேசிய கீதத்துக்கு மரியாதை கொடுத்து தேசிய கீதத்தை கூட்டத்தின் தொடக்கத்திலும், முடிவிலும் இசைக்க வேண்டும்.” என்றார்.
ஆளுநரின் தேசிய கீதம் குறித்த இந்த கருத்துக்கு விளக்கம் அளித்த சபாநாயகர் அப்பாவு, “ஆளுநர் தேசிய கீதம் குறித்து அவையில் ஒரு கருத்தை கூறினார். அதுதொடர்பான விவரங்களை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். தேசிய கீதம் இசைப்பது குறித்து கடந்தாண்டே எனக்கு ஆளுநர் கடிதம் எழுதி, அந்தப் பிரச்சினை ஏற்கனவே தீர்க்கப்பட்டுவிட்டது.
இன்றைய நிகழ்வில் ஆளுநர் உரை என்பது அரசமைப்பு சட்டத்தின்படி ஆளுநருக்கு உள்ள கடமை. அந்த கடமையை நிறைவேற்ற ஆளுநர் இன்று பேரவைக்கு வருகை தந்தார். இப்பேரவை எப்போதும் மரபுகளை மதித்து பின்பற்றி வருகிறது. அந்த வகையில் ஆளுநர் உரையின் தொடக்கத்துக்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்தும், உரை முடிவின்போது தேசிய கீதமும் பாடப்பட்டு வருகிறது என்பதை கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன்” என்றார். பின்னர், சட்டப்பேரவையில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு கூட்டத்தொடரின் முதல்நாள் நிறைவு பெற்றது.
+ There are no comments
Add yours