பள்ளி மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு குறித்த அறிவை ஊட்டுவதற்காக மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டது தமிழ்நாடு அரசு. அதன்படி ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் செயற்கை நுண்ணறிவில் பயிற்சி அளிப்பதற்காக மைக்ரோசாப்ட் TEALS திட்டம் எனும் ஒரு திட்டத்தை, நாட்டிலேயே முதல்முறையாக தமிழ்நாடு அரசு கொண்டு வந்திருக்கிறது.
இது குறித்து பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை கூறுகையில், இது தேசிய கல்விக் கொள்கையில் சொல்லப்பட்ட திட்டம் என்று தெரிவித்துள்ளார். மேலும் வெகு விரைவில் மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு அரசு கொண்டுவரும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இதற்கு தமிழ்நாடு அரசு பதில் அளிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: ”அண்ணாமலை வரலாற்றை மாற்றவோ, திரிக்கவோ முயலக் கூடாது. தமிழ்நாடு அரசு அவரது கூற்றை முற்றிலும் நிராகரிக்கிறது. தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழ்நாட்டுக்கு என்று வரலாறும் பாரம்பரியமும் உண்டு.
கடந்த 1920 ஜூலை 16ம் தேதி கிண்டி பொறியியல் கல்லூரியில் தமிழ் மன்ற விழாவில் பங்கேற்ற தந்தை பெரியார் கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த ஐபிஎம் கம்ப்யூட்டர் 1620 என்ற கணினியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்திருந்தார். அப்போது ஒவ்வொருவரின் சட்டைப் பையிலும் வருங்காலத்தில் ஒரு தகவல் தொடர்பு கருவி இருக்கும் என இன்றைய செல்போன் குறித்து அன்றே கணித்து சொன்னார்.”
”இதன் தொடர்ச்சியாக 1997 ல் அன்றைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்கள் தொலைநோக்கு பார்வையோடு தமிழ்நாட்டுக்கு என தனியே தகவல் தொழில்நுட்பத் துறைக்கான கொள்கை ஒன்றை உருவாக்கி, தனியாக ஒரு துறையை உருவாக்கினார். அதற்கென ஒரு அமைச்சரும் நியமிக்கப்பட்டார். இதற்கான திட்டங்களை தீட்டியதோடு, டைடல் பார்க் போன்ற கட்டமைப்புகளை மாநிலத்தில் உருவாக்கி உலக நிறுவனங்களின் முதலீட்டு மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றிக் காட்டினார்.
“தேசிய கல்விக் கொள்கை என்கிற ஒன்று உருவாக்கப்படுவதற்கு முன்பாகவே இவையெல்லாம் நடைபெற்றுள்ளன. தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. எனினும் அதில் சில மாநிலங்கள் அடைய வேண்டிய இலக்குகள் என்று சொல்லப்பட்டிருக்கும் பலவற்றை தமிழ்நாடு ஏற்கனவே அடைந்து விட்டது.
2035 ஆம் ஆண்டுக்குள் தேசிய அளவில் மாணவர் சேர்க்கை விகிதத்தை 50 சதவீதம் ஆக்க வேண்டுமென மத்திய அரசு கூறியுள்ள நிலையில், தமிழ்நாடு 100 சதவீத இலக்கை எட்டிவிடும். தமிழ்நாடு அரசு செய்ததை, செய்து கொண்டிருப்பதை தேசிய கல்விக் கொள்கையில் இணைத்துவிட்டு, தேசிய கல்விக் கொள்கையின்படி தமிழ்நாடு செயல்படுகிறது என்று சொல்வது நகைப்பிற்குரியது”
“குறிப்பாக தொழில்நுட்பம் சார்ந்து தமிழ்நாட்டுக்கு யாரும் வகுப்பெடுக்க தேவை இல்லை. நாட்டின் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு எப்போதும் தொழில்நுட்பத் துறையில், குறிப்பாக தகவல் தொழில்நுட்பத்தில் முன்னோடி மாநிலமாகவே திகழ்ந்து வருகிறது. முன்னோடி மாநிலமான தமிழ்நாட்டில் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் செயற்கை நுண்ணறிவு, மெஷின் லேர்னிங் போன்றவற்றில் வருங்காலத்தில் மிகத் தீவிரமாக பயிற்சிகள் அளிக்கப்படும்.
செயற்கை நுண்ணறிவை கையில் எடுக்கும் மாநிலமே இன்னும் பத்தாண்டுகளில் முன்னணி மாநிலமாக இருக்கப் போகிறது. பெரியார் காட்டிய பாதையில் தமிழ்நாடு அரசு முற்போக்கு பாதையில் செல்லும் அரசாகவே செயல்படும். அண்ணாமலை பகல் கனவு காண்பது போல், மும்மொழிக் கொள்கை ஒருபோதும் தமிழ்நாட்டில் உருவாக வாய்ப்பு இல்லை. இருமொழிக் கொள்கையே தொடரும்” என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours