சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், ஓட்டுநர் இல்லாத 10 மெட்ரோ ரயில்களை தயாரிக்க அல்ஸ்டோம் நிறுவனத்துடன் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒப்பந்தம் செய்துகொண்டது. சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகின்றன. இந்த 3 வழித்தடங்களில் பணிகள் முடிந்து பிறகு, 138 ஓட்டுநர் இல்லாத ரயில்களை இயக்க மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஒவ்வொரு மெட்ரோ ரயிலும் 3 பெட்டிகளைக் கொண்டிருக்கும். முதல் கட்டமாக, ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் 3 பெட்டிகளைக் கொண்ட 26 மெட்ரோ ரயில்களை உருவாக்கும் ஒப்பந்தம் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்துடன் கடந்த ஆண்டு நவ. 17-ம் தேதி மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், கூடுதலாக 10 மெட்ரோ ரயில்கள் தயாரித்து வழங்க அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்துடன் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நேற்று முன்தினம் ஒப்பந்தம் செய்து கொண்டது. இதன் மதிப்பு ரூ.269 கோடியாகும்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி மற்றும் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தின் வர்த்தக இயக்குநர் ராஜீவ் ஜோய்சர் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். மேற்கண்ட இரு ஒப்பந்தங்கள் வாயிலாக, 108 மெட்ரோ ரயில் பெட்டிகளைத் தயாரித்து, சென்னை மெட்ரோ நிறுவனத்துக்கு வழங்கும். இந்த ஒப்பந்தத்தில், வடிவமைப்பு, உற்பத்தி, சோதனை, தரமான மெட்ரோ ரயில் இயக்குதலுக்கான தகுதி, பணியாளர்களுக்குப் பயிற்சி, உதிரி பாகங்கள் வழங்கல் மற்றும் குறைபாடுகளுக்குப் பொறுப்பு ஏற்பது போன்றவை இதில் அடங்கும். இந்த ஒப்பந்தத்தின் கீழ், மெட்ரோ ரயில்கள் 28 மாதங்களில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். 4-வது வழித்தடத்தில் பூந்தமல்லியில் கட்டப்பட்டு வரும் பணிமனையில் மெட்ரோ ரயில்கள் பராமரிக்கப்பட்டு இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours