சபரிமலை மகர விளக்கு பூஜை முடிந்து சொந்த ஊர் திரும்புபவர்களுக்காக வரும் செவ்வாய்க்கிழமை கொல்லத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலில் தற்போது மகர விளக்கு பூஜை நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்வான மகரஜோதி தரிசனம் நாளை நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து வருகிற 18ம் தேதி படிபூஜை நிகழ்ச்சிகள் நடைபெறும். இதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் தற்போது சபரிமலையில் குவிந்துள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து ஏராளமானோர் தற்போது சபரிமலை கோயிலுக்கு யாத்திரையாக சென்றுள்ளனர்.
இதனிடையே சபரிமலை மகர விளக்கு பூஜை முடிந்து சொந்த ஊர் திரும்புபவர்களுக்காக வரும் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 16) கொல்லத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதிகாலை 3 மணிக்குக் கொல்லத்திலிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு இந்த ரயில் எழும்பூரை வந்தடையும். அதே ரயில் மீண்டும் இரவு 11:45 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்பட்டு அடுத்த நாள் மாலை 5 மணிக்கு கொல்லம் சென்றடையும்.
இந்த ரயிலுக்கான முன்பதிவு துவங்கியுள்ள நிலையில் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு பக்தர்களுக்கு ரயில்வே நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. இந்த ரயில் செங்கனூர், கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர், பெரம்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours