டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மை தேர்வு முடிவுகள் மேலும் தாமதமாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் 5,446 பணியிடங்களை நிரப்ப குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ முதல்நிலைத் தேர்வு கடந்தாண்டு மே மாதம் நடைபெற்றது. அதன் முடிவுகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. அதன்பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் முதன்மை தேர்வு நடைபெற்றது.
இத்தேர்வை 55,041 தேர்வர்கள் எழுதினர். ஆனால், 10 மாதங்கள் கடந்தும் இதுவரை முதன்மை தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை.
இதுகுறித்து ஏற்கெனவே விளக்கம் அளித்திருந்த தமிழ்நாடு மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, டிசம்பர் முதல் வாரத்தில் முடிவுகள் வெளியாகும் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது டிசம்பர் முதல் வாரம் முடிவடைந்த நிலையில், முதன்மை தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று தேர்வர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.
விடைத்தாள் மதிப்பீடு செய்வதற்கான கணினி ஆய்வகம் ஒன்று மட்டுமே இருந்த நிலையில், தற்போது கூடுதலாக மற்றொரு ஆய்வகம் அமைக்கப்பட்டு மதிப்பீட்டுப் பணிகள் நடைபெற்று வருவதாக தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
+ There are no comments
Add yours