தேர்தல் வாக்குறுதிகளை 100 சதவீதம் நிறைவேற்றிவிட்டதாக கூறும் முதல்வர் ஸ்டாலின் – எடப்பாடி கண்டனம்!!

Spread the love

தேர்தல் சமயத்தில் அளித்த பல வாக்குறுதிகளை நிறைவேற்றப்படாத நிலையில், 100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக முதல்வர் ஸ்டாலின் கூறிவருகிறார் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருப்பதாவது..

“தி.மு.க. தலைவர், பொம்மை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது கட்சியினரிடம் வாக்காளர்களை சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தல் உள்ளிட்ட பணிகளைப் பற்றி பேசுவதில் எனக்கு ஆட்சேபனையில்லை. ஆனால், எதைப் பற்றி பேச வேண்டுமோ, அதைப் பற்றி பேசாமல், அவருடைய பேச்சில், பாதிக்கும் மேல் என்னைப் பற்றி பேசியதில் இருந்தே, அவருக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது என்பது நன்கு விளங்குகிறது.

ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் இருமுறை மின் கட்டண உயர்வு, சொத்து வரி மற்றும் வீட்டுவரி உயர்வு என்று தமிழக மக்கள் அனைவரது தினசரி வாழ்வையே புரட்டிப் போட்ட நிர்வாகத் திறனற்ற, பொம்மை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற 29 மாத கால ஆட்சியில் நிர்வாக ரீதியாக படுதோல்வியை சந்தித்து மக்களின் வெறுப்புக்கு உள்ளாகியதை நான் ஒவ்வொரு முறையும் எடுத்துரைக்கிறேன். இதற்கு மு.க.ஸ்டாலின் பதில் என்ன?

பா.ஜ.க.விடம் தமிழகத்தின் உரிமைகளை அ.தி.மு.க. அடகு வைத்துள்ளதாகப் பேசியுள்ளார். ஆனால். 1999-ம் ஆண்டு. ஆட்சி அதிகாரத்துக்காக 5 ஆண்டுகள் பா.ஜ.க.வின் அடிமையாக தி.மு.க.தான் இருந்துள்ளது என்பதற்கு என்ன பதில் கூறப்போகிறார்.

மகளிர் இருசக்கர வாகன மானியத் திட்டம். தாலிக்குத் தங்கம் திட்டம் போன்ற மக்கள் நலத் திட்டங்களுக்கு மூடுவிழா செய்துவிட்டு, அந்நிதியை கொண்டு மகளிர் உரிமைத் தொகை வழங்கியுள்ளார்.

அதையும், தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டவாறு அனைத்து குடும்பப்பெண்களுக்கும் வழங்கவில்லை. பல்வேறு நிபந்தனைகளை விதித்ததால் பாதிக்கும் மேற்பட்ட மகளிருக்கு உரிமைத் தொகை கிடைக்கவில்லை.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம். உங்களது 29 மாதகால தி.மு.க. ஆட்சியில், தமிழக மக்களுக்கு கொண்டுவரப்பட்ட திட்டங்கள் என்ன என்று கேட்டால், அதைப் பற்றி பேசாமல், மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போல். தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட வாக்குறுதிகளை 100 சதவீதம் நிறைவேற்றிவிட்டதாக தமிழக மக்களிடையே பொய் பேசுகிறார்.

29 மாத கால ஆட்சியில் தமிழக மக்களின் நலனுக்காக மு.க.ஸ்டாலின் எந்தத் திட்டத்தையும் அறிவிக்கவில்லை செயல்படுத்தவில்லை.

தான் வகிப்பது பெருமை மிக்க முதல்-அமைச்சர் பதவி என்பதை மறந்து, என் மீதும். அ.தி.மு.க. மீதும் பாய்ந்து பிறாண்டியிருப்பது. ‘அரண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேய்’ என்ற பழமொழியை நிரூபிப்பதாக உள்ளது.

இனியாவது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொய்ப் பிரசாரத்தை நிறுத்துவிட்டு, தமிழகத்தில் நிலைமை என்ன, தமிழக மக்கள் தி.மு.க.வைப் பற்றியும், அவரைப் பற்றியும் என்ன பேசுகிறார்கள் என்று தனது காவல் துறையை வைத்து விசாரித்துவிட்டு, இனியாவது உண்மையாகவே தமிழக மக்களுக்கு பயனளிக்கும் வகையில் நல்ல திட்டங்களை செயல்படுத்தவும். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours