மிக்ஜாம் புயல் காரணமாக பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பான முக்கியமான அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் புதிய அட்டவணை மாணவர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட வட தமிழகத்தில் மிக்ஜாம் புயல் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதிலிருந்து மீண்டு வருவதற்கான நடவடிக்கைகள் கடந்த மூன்று நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்னும் சில இடங்களில் இயல்பு நிலை திரும்பவில்லை. மின் இணைப்பு வரவில்லை.
பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை
தேங்கிய நீர் வெளியேறவில்லை. அத்தியாவசிய தேவைகள் கிடைக்கவில்லை. மொபைல் டவர் சரியாக வரவில்லை எனப் பல்வேறு விதமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதனைக் கருத்தில் கொண்டு பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.
செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு
அந்த வகையில் பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு அட்டவணையும் மாற்றப்பட்டுள்ளது. முன்னதாக டிசம்பர் 4ஆம் தேதி செமஸ்டர் தேர்வுகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இது மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்படும். தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பல்கலைக்கழகம் நிர்வாகம் தெரிவித்தது.
அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
இந்நிலையில் புதிய தேர்வு அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, டிசம்பர் 11ஆம் தேதி திங்கள் அன்று செமஸ்டர் தேர்வுகள் தொடங்குகின்றன. இடையில் டிசம்பர் 17, 24, 31 ஆகிய மூன்று ஞாயிற்று கிழமைகள் மட்டும் விடுமுறை. எஞ்சிய நாட்களில் பாடப்பிரிவிற்கு ஏற்ப தேர்வுகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் மாணவர்களுக்கு அலர்ட்
இது அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள காலேஜ் ஆஃப் எஞ்சினியரிங், எம்.ஐ.டி, அழகப்பா காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, ஆர்கிடெக்சர் அண்ட் பிளானிங் ஆகிய நான்கு கல்லூரிகள் மற்றும் உறுப்பு கல்லூரிகளில் படிக்கும் பொறியியல் மாணவர்களுக்கு பொருந்தும் எனக் கூறப்பட்டிருக்கிறது.
தமிழக அரசு கோரிக்கையும், மத்திய அரசு நிதியுதவியும்
மிக்ஜாம் புயல் பாதிப்புகளை சரிசெய்யும் வகையில் 5 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது. இந்த சூழலில் புயல் சேதங்களை எதிர்கொள்ள 450 கோடி ரூபாய் வழங்க பிரதமர் மோடி இன்று காலை உத்தரவிட்டுள்ளார். இதுதவிர மாநில பேரிடர் மீட்பு பணிகளுக்கான நிதியின் கீழ் இரண்டாவது தவணையாக 493.60 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours