தக்காளி விலை மீண்டும் தாறுமாறாக உயரத் தொடங்கி உள்ளதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.
நல்ல விளைச்சல் காரணமாக கடந்த சில நாட்களாக தக்காளி விலை கட்டுக்குள் இருந்து வந்தது. சில்லறை விற்பனையில் கிலோ 15 முதல் 20 ரூபாய் வரை விற்கப்பட்டதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மூன்று கிலோ ஐம்பது ரூபாய்க்கு வீடு தேடி வந்து வாகனங்கள் மூலம் தக்காளி விற்கப்பட்டதால் மக்கள் எளிதில் அதை வாங்கி பயன்படுத்தி வந்தனர்.
ஆனால், கடும் வெப்பம் காரணமாக மீண்டும் தக்காளி விலை உயரத் தொடங்கியுள்ளது. வாட்டி வதைத்து வரும் வெயில் காரணமாக தக்காளி செடிகள் கருகி வருகின்றன. இதனால் தக்காளி உற்பத்தி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். இதன் காரணமாக சந்தைக்கு தக்காளி வரத்து மிகவும் குறைந்துள்ளது.
தமிழ்நாட்டின் மிகப்பெரிய தக்காளி சந்தையான பாலக்கோட்டில் நாளொன்றுக்கு 100 டன் தக்காளி விற்பனைக்கு வருவது வழக்கம். ஆனால் உற்பத்தி பாதிப்பு காரணமாக இன்று மூன்று டன் தக்காளி மட்டுமே விற்பனைக்கு வந்துள்ளதாக அங்குள்ள வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அதன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி தற்காலி விலை 50 ரூபாயாக உள்ளது. இது சில்லறை விலையில் மேலும் அதிகரிக்க கூடும் என்பதால் நடுத்தர மக்கள் இல்லத்தரசிகள் மிகவும் கவலையடைந்துள்ளனர்.
+ There are no comments
Add yours