தமிழக முதல்வர் அறிவித்த ‘டைடல் பார்க்’ திட்டம், மதுரை மாட்டுத்தாவணி மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் ரூ.600 கோடியில் 5.5 ஏக்கரில் அமைகிறது. இந்த திட்டத்துக்கான நிலம் இன்னும் ஒப்படைப்பு செய்யப்படாத நிலையில், டைடல் பார்க் அமைப்பதற்கான மண் பரிசோதனை இன்று தொடங்கியது.
தமிழகத்தில் மென்பொருள்நிறுவனங்களின் தலைமையிடமாக சென்னை இருந்து வருகிறது. அதற்கு அடுத்து கோவையில் ஓரளவு மென்பொருள் நிறுவனங்கள் செயல்படுகின்றன. தமிழகத்தின் பிற நகரங்களில் விரல்விட்டு எண்ணக்கூடிய மென்பொருள் நிறுவனங்களே உள்ளன. குறிப்பாக, தென் மாவட்டங்களில் மதுரையில் இரு முக்கிய மென்பொருள் நிறுவனங்களே உள்ளன. மற்றவை சிறு, குறு மென்பொருள் நிறுவனங்களே. அதனால், தென் மாவட்டங்களில் ஐடி படித்து முடித்த இளைஞர்களுக்கு பெரிய மென்பொருள் நிறுவனங்களுக்கான வேலைவாய்ப்புகள் இல்லாமல் உள்ளன.
அவர்கள், தகவல் தொழில்நுட்ப துறை வேலைவாய்ப்புகளுக்காக சென்னை, பெங்களூரு செல்ல வேண்டிய நிலை உள்ளது. அவர்களுக்கு அவர்களுடைய சொந்த மாவட்டங்களுக்கு அருகிலே மென்பொருள் நிறுவன வேலைவாய்ப்புகளை அதிகரிக்க, தென் மாவட்டங்களின் தலைநகரான மதுரையில் 10.5 ஏக்கரில் எல்காட் உதவியுடன் மிகப் பெரிய டைடல் பார்க் அமைப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு அறிவித்தார். இந்த திட்டம் மூலம், 10,000-க்கும் மேற்பட்டவர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என கூறப்படுகிறது.
முதல்வர் அறிவித்த டைடல் பார்க், மாட்டுத்தாவணியில் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி நடந்தது. எல்காட் அதிகாரிகள் நேரடியாகவே வந்து, அப்போதைய ஆட்சியர் அனீஸ் சேகருடன் கலந்து ஆலோசித்து, மாநகராட்சிக்கு சொந்தமான மாட்டுத்தாவணியில் உள்ள நிலத்தில் முதற்கட்டமாக 5.5 ஏக்கர் நிலம் ஒதுக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக மாநகராட்சி நகரமைப்பு துறை, அந்த நிலத்தை எல்காட் வசம் ஒப்படைக்க தமிழக அரசு நகராட்சி நிர்வாகத்துறைக்கு அனுமதி கேட்டு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு தற்போது வரை நகராட்சி நிர்வாகத்துறை ஒப்புதல் வழங்கவில்லை. இன்னும் இந்த திட்டத்துக்கு நிலமே ஒப்படைப்பு செய்யப்படாததால், இந்த திட்டம் வருமா, வராதா என்ற கேள்விகளும், சர்ச்சைகளும் ஏற்பட்டது.
இந்நிலையில், நிலம் ஒப்படைக்கப்படாத நிலையிலே, இன்று முதல் டைடல் பார்க் திட்டத்துக்கான ‘கன்சல்டன்ட்’ நிறுவனம், மாட்டுத்தாவணியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடம் ஒதுக்கப்படுவதாக முடிவு செய்யப்பட்ட இடத்தில் மண் பரிசோதனை செய்யும் பணியை தொடங்கியது. மாநகராட்சி முதன்மை பொறியாளர் ரூபன், நகரமைப்பு அதிகாரி மாலதி மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். மண் பரிசோதனை தொடங்கியுள்ளதால் இந்த திட்டம் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ”டைடல் பார்க் நிறுவனம் அமைப்பதற்கான சில முன்தயாரிப்பு பணிகளை மேற்கொள்ள கன்சல்டன்ட் நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளது. அந்நிறுவனம், முதற்கட்டமாக மண் பரிசோதனை நடத்துகிறது. மொத்தம் 12 இடங்களில் மண்பரிசோதனை செய்யப்படுகிறது. முதல்வர் அறிவித்த திட்டம் என்பதால் முக்கியத்துவம் கொடுத்து நிலம் ஒப்படைக்கப்பட்டதும், திட்ட மதிப்பீடு தயார் செய்து அதன்பின் டெண்டர்விட்டு பணிகள் துரிதமாக தொடங்கப்படும். முதற்கட்டமாக ரூ.600 கோடியில் 5.5 ஏக்கரில் அமைகிறது. அதற்கான வரவேற்பை பொறுத்து தொடர்ந்து மேலும் 5 ஏக்கரில் இந்தத் திட்டத்தை விரிவுப்படுத்தும் திட்டமும் உள்ளது” என்றார்.
+ There are no comments
Add yours