முன்னாள் காவல்துறை தலைவர் நடராஜ் மீதான வழக்கை திரும்ப பெறுக.. எடப்பாடி பழனிச்சாமி !

Spread the love

தமிழக காவல்துறையில் பல்வேறு உயர் பதவிகளை வகித்த ஆர்.நடராஜ், பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அதிமுகவில் இணைந்தார். இதையடுத்து, கடந்த 2016ம் ஆண்டு சென்னை மயிலாப்பூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த சூழலில் வாட்ஸ் அப் குழு ஒன்றில் இந்துக்கள் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து பொய்யான செய்தி பரப்பியதாக முன்னாள் காவல்துறை தலைவர் நடராஜ் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் கூறுகையில், ஒரு ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி தான் இருக்கும் வாட்ஸ்-அப் குழுவில் ஒரு செய்தியை பரப்பி கொண்டிருக்கிறார் என பெயரை குறிப்பிடாமல் தெரிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து, முதலமைச்சர் குறித்து அவதூறு கருத்து பரப்பியதாக முன்னாள் டிஜிபியும், எம்.எல்.ஏவுமான நடராஜ் மீது திருச்சி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

திருச்சி மத்திய மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் சீலா அளித்த புகார் மனு அடிப்படையில், சைபர் கிரைம் போலீசார் நடராஜ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மதக்கலவரத்தை தூண்டுதல், வதந்தி பரப்புதல் உள்பட 7பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் முன்னாள் காவல்துறை தலைவர் நடராஜ் மீதான வழக்கை திரும்ப பெற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவரது எக்ஸ் தள பதிவில், திமுக ஆட்சியாளர்களின் அதிகார மமதை, அடாவடித்தனங்களை தோலுரித்துக்காட்டும் நமது தகவல் தொழில்நுட்ப அணியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் ஒருசில தொலைகாட்சிகள் மீது பொய் வழக்குகள் புனைவதை திமுக வழக்கமாக கொண்டுள்ளது.

கடந்த 30 மாத திமுக ஆட்சி குறித்தும், முதலமைச்சர் முதல் மந்திரிகள் வரையிலானவர்களின் நடவடிக்கைகள் குறித்தும் சமூக வலைதளங்களில் வந்த செய்திகளைப் பிரதிபலித்த காவல்துறை முன்னாள் தலைவரும், தமிழ்நாடு தேர்வாணய குழு முன்னாள் தலைவரும், அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.நடராஜ் மீது, முதலமைச்சர் உத்தரவுப்படி பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருப்பது, இந்த திமுக அரசின் சர்வாதிகாரப் போக்கையும், சகிப்புத்தன்மையற்ற மனநிலையையுமே எடுத்துக்காட்டுகிறது.

எனவே, காவல்துறை முன்னாள் தலைவர் மற்றும் தனியார் செய்தி சேனல் தொலைக்காட்சி மீது புனையப்பட்ட வழக்குகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours