இந்தியாவை விட்டு வெளியேறுவோம்: வாட்ஸ்அப்

Spread the love

வாட்ஸ்அப்-ன் அம்சமான எண்ட்-டு-எண்ட் என்கிரிப்ஷன்-ஐ உடைக்க மத்திய அரசு கட்டாயப்படுத்தினால் இந்தியாவை விட்டு வெளியேற நேரிடும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு மத்திய அரசால் தகவல் தொழில்நுட்ப விதிகள் சட்டம் கொண்டு வரப்பட்டது. சமூக வலைதளங்களில் பயனாளர்களின் உரைகளை கவனித்து அவர்களை அடையாளம் காண வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்துவதாக மெட்டா நிறுவனம் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் வாட்ஸ் அப் நிறுவனம் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் தேஜஸ் கரியா, வாட்ஸ்அப்பின் பிரைவசியை கருத்தில் கொண்டே இந்தியாவில் 400 மில்லியன் மக்கள் இதனை பயன்படுத்துகின்றனர்.

எண்ட்-டு-எண்ட் என்கிரிப்ஷன் என்பது வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பியவரும், அதை பெறுபவரும் மட்டுமே தாங்கள் அனுப்பிய மெசேஜ்களை பார்க்க முடியும்.

இந்த அம்சத்தால் மட்டுமே மக்கள் அச்சமின்றி இதனை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் மத்திய அரசு கொண்டுவந்துள்ள தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021 ஆனது, இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 14, 19 மற்றும் 21, ஆகியவற்றை மீறுவதாக அமைந்துள்ளது.

இதுபோன்ற விதி மற்ற எந்த நாடுகளிலும் இல்லை. ஏன், பிரேசிலில் கூட இல்லை. எந்த மெசேஜ்களை டிகிரிப்ட் செய்யச் சொல்லி கேட்கப்படும் என்பது எங்களுக்குத் தெரியாது. எனவே, எண்ட்-டு-எண்ட் என்கிரிப்ஷன்-ஐ உடைக்க மத்திய அரசு எங்களை கட்டாயப்படுத்தினால் இந்தியாவை விட்டு வெளியேற நேரிடும்.

சட்டத்திற்கு விளக்கம் அளித்த மத்திய அரசு வழக்கறிஞர், இன்றைய காலகட்டத்துக்கு இத்தகைய செயல்முறையும் சட்டமும் அவசியம் என வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 14-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours