உங்களுடைய சொத்துக்களை பாதுகாப்பதும், அது உங்களுக்குப் பிறகு சரியான நபரை சென்றடைவதிலும் எந்த ஒரு சிக்கலும் ஏற்படாமல் இருப்பது போன்றவை பொருளாதார திட்டமிடலில் அடங்கும். உங்களுடைய வங்கி கணக்கு அல்லது மியூச்சுவல் ஃபண்ட் அக்கவுண்டிற்கு நாமினியை சேர்ப்பது இதில் ஒரு முக்கியமான வழியாக கருதப்படுகிறது. அவ்வாறு நீங்கள் நாமினியை நியமிப்பதால் ஏராளமான பலன்களை பெறுகிறீர்கள். நாமினியை நியமிப்பதன் மூலமாக உங்களுடைய சொத்துக்கள் நேரடியாக உங்கள் அன்புக்குரியவர்களை சென்றடைவதை நீங்கள் உறுதிப்படுத்துகிறீர்கள். இந்த பதிவில் வங்கி கணக்கு அல்லது மியூச்சுவல் ஃபண்ட் கணக்குகளில் நாமினியை சேர்ப்பதன் பல்வேறு பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
சொத்துக்களை சிரமம் இல்லாமல் மாற்ற:
வங்கி கணக்கு:
உங்களுடைய வங்கிக் கணக்கில் ஒரு நாமினியை சேர்த்து விட்டால் எந்த விதமான நீண்ட சட்ட ரீதியான செயல்முறை இல்லாமல் அக்கவுண்ட் பேலன்ஸை நாமினிக்கு வங்கியால் எளிதாக டிரான்ஸ்ஃபர் செய்ய முடியும்.
மியூச்சுவல் ஃபண்ட் அக்கவுண்ட்:
அதேபோல உங்களுடைய மியூச்சுவல் ஃபண்ட் அக்கவுண்டுகளில் நாமினியை நியமித்திருந்தால் அக்கவுண்ட் ஹோல்டர் இறந்த பிறகு சட்ட ரீதியான முறைமைகள் பெரிய அளவில் இல்லாமலேயே அக்கவுண்டில் இருக்கும் பணத்தை நேரடியாக நாமினிக்கு டிரான்ஸ்ஃபர் செய்துவிடலாம். ஒருவேளை நீங்கள் இறந்துவிடும் பட்சத்தில் உங்களுடைய அக்கவுண்டில் இருக்கும் நிதி நேரடியாக நாமினிக்கு கிடைக்கும்.
குறைந்தபட்ச சட்ட ரீதியான சிக்கல்கள்:
சட்டரீதியான பிரச்சனைகளை தவிர்ப்பதற்கு நாமினேஷன் உதவுகிறது. தன்னுடைய சொத்துக்கள் தனக்கு பிறகு யாருக்கு சேர வேண்டும் என்பதை குறிப்பிட்ட அந்த அக்கவுண்ட் ஹோல்டரே முடிவு செய்கிறார் என்பதால் இதில் சட்ட ரீதியான சிக்கல்கள் எழுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. சிக்கலான நேரத்தில் உங்கள் குடும்பத்தின் பொருளாதார சுமையை குறைப்பதற்கு நாமினி வைத்திருப்பது பெரிய அளவில் உதவக் கூடும்.
உங்களை சார்ந்து இருப்பவர்களுக்கு பொருளாதார பாதுகாப்பு:
நாமினியை நியமிப்பது உங்களுடைய உங்களை சார்ந்து இருப்பவர்களுக்கு சரியான நேரத்தில் பொருளாதார உதவி கிடைப்பதை உறுதி செய்கிறது. அக்கவுண்ட் ஹோல்டர் துரதிஷ்டவசமாக இறந்து போகும் பட்சத்தில் உடனடி பொருளாதாரத் தேவைகளை பூர்த்தி செய்வதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.
மைனர் பெனிஃபிஷியரி: ஒரு மைனரை நீங்கள் நாமினியாக நியமிக்கும் பொழுது அவர் சட்ட ரீதியான சரியான வயதை அடையும் வரை நிதிகளை நிர்வகிப்பதற்கு கார்டியன் ஒருவரை நீங்கள் நியமிக்கலாம். இதன் மூலமாக பணம் தவறான முறையில் கையாளப்படுவதை நீங்கள் தவிர்க்கலாம்.
மன தெளிவு மற்றும் அமைதி:
தன்னுடைய சொத்துக்கள் சரியான முறையில் பகிர்ந்து அளிக்கப்பட்டிருப்பதை இந்த நாமினி நியமிப்பு உறுதி செய்கிறது. இதனால் அக்கவுண்ட் ஹோல்டர் எந்த ஒரு மன கஷ்டமும் இல்லாமல் மன அமைதியோடு நிம்மதியாக இருக்கலாம்.
செலவு:
சட்டரீதியான வாரிசு சான்றிதழ் பெறுவதற்கான தேவையை இந்த நாமினி நியமிப்பு தவிர்க்கிறது. இல்லையெனில் இதற்காக நீங்கள் பணத்தை செலவு செய்ய வேண்டியிருக்கலாம்.
எளிமையான செயல்முறை:
குறைந்தப்பட்ச ஆவணங்களுடன் உங்களுடைய சொத்துக்களுக்கான நாமினியை நீங்கள் கிளைம் செய்ய அனுமதிக்கப்படுகிறீர்கள்.
நெகிழ்வுத் தன்மை:
எந்த நேரத்தில் வேண்டுமானாலும் நீங்கள் உங்களுடைய நாமினியின் பெயரை மாற்றலாம். தனிநபர் சூழ்நிலையின் அடிப்படையில் இந்த அனுமதி உங்களுக்கு வழங்கப்படுகிறது.
சட்ட ரீதியான சிக்கல்களுக்கு எதிரான பாதுகாப்பு:
நாமினி இல்லாத பட்சத்தில் சட்டபூர்வமான வாரிசு யார் என்பதை தீர்மானம் செய்யும் செயல்முறை சிக்கல்கள் நிறைந்ததாகவும், நேரத்தை எடுத்துக் கொள்ளக் கூடியதாகவும் அமையும். இதனால் உரியவருக்கு சொத்து கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. ஆகவே நீங்கள் நாமினியை நியமித்து விட்டால் இது போன்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
ஆகவே இந்த விஷயங்களை கருத்தில் கொண்டு உங்களுடைய சொத்துக்கள் உங்களுக்குப் பிறகு உங்களின் அன்புக்குரியவர்களை சென்றடைவதை உறுதி செய்வதற்கு உங்களுடைய பேங்க் அக்கவுண்ட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் அக்கவுண்டில் நாமினியை சேர்க்க மறக்க வேண்டாம்.
+ There are no comments
Add yours