சென்னையில் இன்று (நவ.29) இரவு 10 மணி வரை இரண்டு மணி நேரத்துக்கு தீவிர மழைப்பொழிவுக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. சென்னையில், புதன்கிழமை காலை முதலே, விட்டுவிட்டு கனமழை பெய்து வந்தது. சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் மழைப்பொழிவு அதிகமாக இருந்தது. இதனால், முக்கிய சாலைகள் மற்றும் சந்திப்புகளில் மழை நீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகினர். மேலும், தொடர்மழையின் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தீவிர மழைப்பொழிவு: இந்நிலையில், இலங்கையை ஒட்டியுள்ள பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக சென்னையின் மீது மேககுவியல்கள் அதிகமாக காணப்படுவதால், இன்று இரவு 10 மணி வரை சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தீவிர மழைப்பொழிவுக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை மற்றும் அதன் புறநகரில் பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக, சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக, இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலசந்திரன் இது குறித்து செய்தியாளர்களிடம் கூறும்போது, “இலங்கையை ஒட்டியுள்ள பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது . இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். அதன் பின்னர் வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் புயலாக வலுப்பெறக்கூடும். இது குறித்து தொடர்ந்து கண்காணித்து தகவல் தெரிவிக்கப்படும்.
தமிழகம், புதுவை காரைக்கால் பகுதிகளில் அடுத்து வரும் ஐந்து தினங்களுக்கு அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் டிசம்பர் 2, 3 ஆம் தேதிகளில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. அடுத்து வரும் இரு தினங்களுக்கு கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கான வாய்ப்பு உள்ளது. மேலும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது” என்று தெரிவித்தார்.
+ There are no comments
Add yours