மிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்பால் பள்ளிக்கரணை, தரமணி இணைப்புச் சாலை, மற்றும் வேளச்சேரி பகுதிகளில் தண்ணீர் தேங்கியிருப்பதால் தொலைபேசி சேவையை மீட்டெடுப்பது சவாலாக உள்ளதாக பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான அந்நிறுவனத்தின் செய்திக் குறிப்பு: கனமழையால் அதிக அளவு தண்ணீர் தேங்கி நிலைமை மோசமடைந்ததால், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அவசர உதவிக்கு அழைப்புகள் அதிக அளவில் வந்தன. களத்தகவல்களின்படி வேளச்சேரி தொலைபேசி இணைப்பகம் குறிப்பிடத்தக்க வகையில் பாதிக்கப்பட்டது. மற்ற தொலைபேசி இணைப்பகங்கள் பிஎஸ்என்எல் குழுவின் முயற்சியால் செயல்பாட்டு நிலைக்கு மீட்டெடுக்கப்பட்டது.
பேட்டரி மற்றும் எஞ்சின் விநியோகம் ஆகியவற்றை பயன்படுத்தி, சேவைகளை சீராக்க குழு அயராது உழைத்து வருகிறது. இக்கட்டான காலகட்டத்தில் வேளச்சேரி மற்றும் மடிப்பாக்கம் நிலையங்களை விரைவாக மீட்டமைத்த மின்வாரியக் குழுவினருக்கு நன்றி. இந்த முயற்சிகள் இருந்தபோதிலும், சவால்கள் தொடர்கின்றன.
தரமணி இணைப்பு சாலை இணைப்பகத்தில் தமிழ்நாடு மின்வாரியத்தின் தீர்வு காரணமாக பணிகள் பாதிக்கப்படாமல் உள்ளது. தரமணி லிங்க் ரோடு இணைப்பகத்தை மீட்டெடுப்பதில் அவசர உதவிக்காக டிரான்ஸ்மிஷன் குழுவிடம் முறையிடப்பட்டுள்ளது. மிக் ஜாம் சூறாவளியின் தாக்குதலுக்குப் பிறகு, மழை நீர் சூழ்ந்ததால் தொலைத்தொடர்பு சேவைகளை விரைவாக மீட்டெடுக்க பல்வேறு சவால்களை கடந்து பிஎஸ்என்எல் நிறுவனம் போராடி வருகிறது.
கட்டுப்பாட்டு அறை அமைப்பு: மறுசீரமைப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க ஒரு பிரத்யேக கட்டுப்பாட்டு அறை நிறுவப்பட்டது. இது தொடர்பு மற்றும் முடிவெடுத்தலுக்கான மத்திய மையமாக செயல்படுகிறது. நிதி ஒதுக்கீடு: அத்தியாவசியப் பொருட்களைக் கொள்முதல் செய்வதை விரைவுபடுத்துவதற்கு, ஒட்டுமொத்த மீட்டெடுப்பை விரைவுபடுத்துவதற்குப் போதுமான நிதி வழங்கப்பட்டது.
டெலிகாம் ஆபரேட்டர்களுடனான ஒருங்கிணைப்பு: மற்ற தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களுடனான ஒருங்கிணைப்பு மற்றும் பகிர்வு செயல்முறையை எளிதாக்கியது. அவசர காலங்களுக்குத் தேவையான அத்தியாவசிய தொலைத்தொடர்பு உபகரணங்கள் கையிருப்பில் உள்ளன. பிஎஸ்என்எல் இணைப்புகள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சமூக உதவி மையங்கள் அமைக்கப்பட்டு தீர்வுகாண முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தொலைதொடர்பு சேவையை விரைவாக மீட்டெடுபதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours