தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்படுகின்றன. அந்த வகையில், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார் பதிவாளர் உட்பட பதவிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலைத் தேர்வு 2022 மே 21-ம் தேதி நடைபெற்றது.
முதன்மை எழுத்துத் தேர்வில் கட்டாயத் தமிழ்மொழி தகுதித்தாள் மற்றும் பொது அறிவு ஆகிய 2 தாள்களுக்குமான தேர்வு கடந்த ஆண்டு பிப்.25-ம் தேதி நடைபெற்றது. இத்தேர்வை 51 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் எழுதியுள்ளனர். இந்த தேர்வுகள் மூலம் குரூப்-2 பதவிகளில் 161, 2ஏ பதவிகளில் 5,990 என மொத்தம் 6,151 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
நீண்ட நாட்களாக இதன் முடிவுகள் வெளியிடப்படாமல் இருந்தன. டிசம்பர் முதல் வாரத்தில் 6000 பேருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலினின் கைகளால் பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என்று மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் அறிவித்திருந்த நிலையில், டிசம்பர் மாதம் முடிந்து புது வருடம் ஆரம்பித்தும் முடிவுகள் வெளியாகாமல் இருந்ததால் எதிர்ப்புகள் எழுந்தன.
ஆனால், ஒரே சமயத்தில் பல தேர்வுகள் நடத்தவேண்டிய சூழ்நிலையாலும் மற்றும் சமீபத்திய புயல் வெள்ளம் காரணமாக விடைத்தாள்கள் திருத்தும் பணிக்கு கூடுதல் காலம் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது என டிஎன்பிஎஸ்சி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும், தேர்வு முடிவுகள் ஜனவரி 12-ம் தேதியில் வெளியிடப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது. அதன்படி, இன்று குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகளை இன்று வெளியிட்டுள்ளது டிஎன்பிஎஸ்சி. இதேபோல் குரூப் 2ஏ தேர்வு முடிவுகளும் வெளியாகியுள்ளன.
+ There are no comments
Add yours