இரட்டை வேடும் பிரதமர் மோடி… மு.க.ஸ்டாலின் !

Spread the love

“தமிழ்நாட்டின் மீதும் தமிழ்நாட்டு மக்களின் மீதும் பிரதமர் மோடிக்கு இருக்கும் காழ்ப்பின் வெளிப்பாடுதான் அவரது இரட்டை வேடம். வாக்குக்காக எனது மக்களை அவதூறு செய்வதை பிரதமர் மோடி நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்று முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில், “தேர்தல் பரப்புரையில் நாகரிக வரம்புகளை மீறாமல், கொள்கை, கோட்பாடுகள், செயல்திட்டங்கள் மீது ஆக்கப்பூர்வமான விமர்சனங்களையும் தங்களது ஆட்சியின் சாதனைகளையும் முன்வைத்து வாக்கு சேகரிப்பதில் முன்னுதாரணமாகத் திகழ வேண்டிய பிரதமர் நரேந்திர மோடி, வெறுப்புப் பேச்சுகளின் மூலம் மக்களிடையே பகை உணர்வையும், மாநிலங்களுக்கு இடையே குரோதத்தையும் தூண்டி வருவது நாட்டுக்கு நல்லதல்ல!.

முன்னதாக, உத்தரப் பிரதேச மக்களை இழித்தும் பழித்தும் தென்னிந்தியர்கள் பேசுவதாகத் தமிழக மக்கள் மீது அபாண்டமான பழியைச் சுமத்தி இருந்தார். மதம், மொழி, இனம் மற்றும் மாநிலத்தின் பெயரால், இன்னொரு தரப்பு மக்களைத் தூண்டிவிடும் செயல் ஆபத்தானது என்று எனது கண்டனத்தை அப்போதே தெரிவித்து இருந்தேன்.

சகோதரத்துவத்தை வளர்க்க வேண்டிய அரசியல் தலைவரே பகையுணர்வைத் தூண்டுவது தவறு என்றும் கூறியிருந்தேன். ஆனாலும் தமிழக மக்களை மோசமானவர்களாக இழித்தும் பழித்தும் பேசும் வழக்கத்தைப் பிரதமர் மோடி நிறுத்திக்கொள்ளவில்லை.

ஒடிசா மாநிலத்தில் தேர்தல் பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, புகழ்பெற்ற ஜெகந்நாதர் ஆலயத்தின் பொக்கிஷ அறையின் தொலைந்துபோன சாவிகள் தமிழகத்தில் இருப்பதாகப் பேசி இருக்கிறார். இது, கோடிக்கணக்கான மக்களால் வணங்கப்படும் புரி ஜெகந்நாதரை அவமதிப்பதோடு, ஒடிசா மாநிலத்தோடு நல்லுறவும் நேசமும் கொண்ட தமிழக மக்களை அவமதிப்பதும் புண்படுத்துவதுமாகும்.

ஜெகந்நாதர் மீது அளவற்ற பக்தி கொண்ட ஒடிசா மக்களைத் தமிழக மக்களுக்கு எதிராகத் தூண்டும் பேச்சல்லவா இது?. ஆலயத்தின் பொக்கிஷத்தைக் களவாடும் திருடர்கள் என்ற பழியைத் தமிழக மக்கள் மீது பிரதமர் மோடி சுமத்தலாமா?. தமிழக மக்களை நேர்மையற்றவர்கள் என்று கூறுவது, தமிழகத்தை அவமதிப்பது அல்லவா?. தமிழர்கள் மீது மோடிக்கு இத்தனை காழ்ப்பும் வெறுப்பும் ஏன்?

தமிழகத்துக்கு வரும்போது தமிழ்மொழியை உயர்வாகப் போற்றுவதாகப் பேசுவதும், தமிழர்களைப் போன்ற அறிவாளிகள் இல்லை என்று பாராட்டுவதும், அதேநேரத்தில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ஒடிசா போன்ற மாநிலங்களில் வாக்கு சேகரிக்கும்போது தமிழக மக்களைத் திருடர்களைப் போலவும், வெறுப்பு மிகுந்தவர்களாகவும் அந்த மாநிலங்களுக்கு எதிரானவர்களாகவும் பேசுவது இரட்டை வேடம். இதை மக்கள் புரிந்து கொள்வார்கள். வாக்குக்காகத் தமிழ்நாட்டையும் தமிழர்களையும் அவதூறு செய்வதைப் பிரதமர் நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours