சென்னை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், புதுக்கோட்டை உட்பட தமிழகத்தில் 12 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் என்ஐஏ திடீர் ரெய்டு மேற்கொண்டு வருகிறது. மொத்தமாக 85 அதிகாரிகள் இந்த ரெய்டுகளில் ஈடுபட்டு உள்ளனர். 12 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஹிஜ்புத் தகர், அல் உம்மா இயக்கங்களுடன் தொடர்புடையவர்கள் வீடுகளில் சோதனை மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூரில் உள்ள அப்துல் கான் என்பவரது வீட்டில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட ‘ஹிஸ்புத் தகர்’ இயக்கத்துக்கு ஆள் சேர்ப்பது, அந்த அமைப்புகளுக்கு உடந்தையாக செயல்பட்டது தொடர்பாக சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடைபெறுகிறது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் ஐந்து இடங்களில் இன்று காலை ஆறு மணி முதல் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தஞ்சாவூர் குழந்தையம்மாள் நகரில் அகமது, தஞ்சாவூர் மாவட்டம் மானாங்கோரையில் உள்ள ஷேக் அலாவுதீன் என்பவரது வீட்டிலும். சாலியமங்கலத்தில் உள்ள அப்துல் ரகுமான், முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்டோர் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
கடந்த வாரம்தான் தேசிய புலனாய்வு அமைப்பு தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் 5 இடங்களில் சோதனை நடத்தியது. பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டது. அதில் பல லேப்டாப்கள் மற்றும் பென் டிரைவ்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதே நேரத்தில் பீகார், கர்நாடகா, ஜார்கண்டிலும் வேறு வேறு விஷயங்களுக்காக ரெய்டுகளை என்ஐஏ அமைப்பு மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
+ There are no comments
Add yours