வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், தூத்துக்குடி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
‘தேஜ்’ புயல்
அரபிக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக் கூடும் என்றும், வரும் 22-ஆம் தேதி (இன்று) தீவிர புயலாக உருவெடுக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே, அறிவித்திருந்தது. இந்த புயலுக்கு இந்தியா பரிந்துரைத்தபடி, ‘தேஜ்’ எனவும் பெயர் வைக்கப்பட்டு இருந்தது.
அதி தீவிர புயலாக வலு
அதன்படி, தேஜ் புயல் தற்போது தென்மேற்கு அரபி கடலில், சகோத்ரா (ஏமன்) நகருக்கு 330 கி.மீ. கிழக்கு-தென்கிழக்கேயும், (ஓமன்) நகருக்கு 690 கி.மீ. தெற்கு-தென்கிழக்கேயும் , அல் கைடா (ஏமன்) நகருக்கு 720 கி.மீ. தென்கிழக்கேயும் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் தற்போது அதி தீவிர புயலாக வலுவடைந்துள்ள காரணத்தால் தமிழகத்திலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த தேஜ் புயலானது வருகின்ற அக்-25ஆம் தேதி ஏமனின் அல் கைதா மற்றும் ஓமனின் சலாலா இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
தேஜ் புயல் நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இதைப்போல, வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலி காரணமாக சென்னை, கடலூர், தூத்துக்குடி, எண்ணூர், காட்டுப்பள்ளி, நாகை, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றபட்டுள்ளது.
மழைக்கு வாய்ப்பு
‘தேஜ்’ புயல் காரணமாக தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, மயிலாடுதுறை, திருவாரூர், திருவள்ளூர், ராமநாதபுரம் நாகப்பட்டினம், தஞ்சாவூர், ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
+ There are no comments
Add yours