மெஹ்சானா: குஜராத் மாநிலம் மெஹ்சானா மாவட்டத்துக்கு அருகில் கட்டுமானப் பணி நடந்து வந்த இடத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்தனர். சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் நடந்து வரும் நிலையில், இடிபாடுகளில் இன்னும் அதிகமானவர்கள் சிக்கி இருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
மாவட்ட தலைநகரில் இருந்து சுமார் 37 கி.மீ. தொலைவில் உள்ள காடி என்ற இடத்தில் தனியார் தொழிற்சாலை ஒன்றில் நிலத்துக்கு அடியில் தொட்டி அமைக்க தொழிலாளர்கள் சிலர் குழி தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மண்சுவர் இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள் உயிருடன் மண்ணுக்குள் புதைந்து போயினர். இந்தச் சம்பவம் குறித்து மாவட்ட வளர்ச்சி அதிகாரி டாக்டர். ஹஸ்ரத் ஜாஸ்மீன் கூறுகையில், “அது கட்டுமானத்தில் இருந்து வந்த தனியார் நிறுவனம். இந்தச் சம்பவம் மதியம் 1.45 மணிக்கு நடந்துள்ளது. எங்களுக்கு கிடைத்த தகவலின்படி, 9 – 10 பேர் உள்ளே சிக்கியிருக்கலாம். அவர்களில் 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
19 வயது இளைஞர் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். அவரின் கூற்றுப்படி, இங்கு 8 – 9 பேர் வேலை பார்த்தனர். இன்னும் 2 – 3 பேர் உள்ளே சிக்கியிருக்கிறார்கள். அவர்களை உயிருடன் மீட்க வேண்டும் என்று நாங்கள் இறைவனை வேண்டிக்கொள்கிறோம்.” என்றார். மீட்புப் பணிகள் தொடர்ந்து வரும் நிலையில், மெஹ்சானா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை உறுதி செய்தார்.
+ There are no comments
Add yours