நடிகர் கார்த்தி நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில், இவர் தற்போது இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் ஜப்பான் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் தான் நடிகர் கார்த்தியின் 25-வது திரைப்படம். இந்த திரைப்படத்திற்கான டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.
கார்த்தியின் 25-வது படத்திற்கான விழா என்ற காரணத்தால் இந்த விழாவில் சூர்யா, யுவன் சங்கர் ராஜா, சிறுத்தை சிவா, எச். வினோத், லோகேஷ் கனகராஜ், சந்தோஷ் நாராயணன், பா.ரஞ்சித் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டார்கள். அப்போது மேடையில் பேசிய நடிகர் சூர்யா தனது தம்பி கார்த்தியை பாராட்டி பேசினார்.
மேடையில் பேசிய அவர் ” ஒரு 20 வருடங்களுக்கு முன்பு கமல் அண்ணன் கார்த்தியின் முதல் படமான பருத்திவீரன் படத்தை தொடங்க பூஜை போட்டு கொடுத்தார். அந்த படத்தை பார்த்துவிட்டு ரஜினிகாந்த் சார் கார்த்தியையும் எங்களையும் பாராட்டினார். இந்த மேடையில் கார்த்தியின் வளர்ச்சியை பார்க்கும் போது எனக்கு அது தான் நியாபகம் வருகிறது.
கார்த்தியின் வெற்றிக்கு மிகவும் முக்கிய காரணம் யார் என்றால் ஞானவேல் ராஜாதான். நானும் கார்த்தியும் ரொம்ப கஷ்டப்பட்ட காலத்தில் பேசாமல் பன்னிகுட்டியை மேய்க்கலாம் என்று கூட பேசி இருக்கிறோம். ஆனால், அந்த சமயம் எல்லாம் எங்களுக்கு நல்ல கதைகளை தேர்வு செய்ய வைத்து வெற்றிபெற வைத்தவர் அவர் தான். என்னிடம் பலர் கூறுவார்கள் நான் உங்களுடைய தம்பி கார்த்தியின் பெரிய ரசிகர் என்று அதெல்லாம் கேட்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.
கார்த்தி என்னை விட சினிமாவில் மிகவும் ஆர்வம் கொண்டவர். அதைப்போல என்னை விட சினிமாவுக்கு அதிகம் ஆர்வம் கொடுப்பது அவர் தான். கார்த்தி சினிமாவிற்குள் நடிக்க வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. அவர் நினைத்து இருந்தால் இப்போது எத்தனையோ படங்களில் நடித்திருக்கலாம். ஆனால், வித்தியாச வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். நான் வேறு பாணி கார்த்தி வேறு பாணி.
என்னிடம் சில கதைகள் வரும் குறிப்பாக கைலியை கட்டுவது, மது அருந்துவது போன்ற கதாபாத்திரங்கள் வந்தால் அதனை அப்படியே கதை நன்றாக இருக்கு இந்த கதையை நீங்கள் கார்த்தி கிட்ட சொல்லுங்கள் என்று அவரிடம் அனுப்பிவிடுவேன். ஆனால், இதல்லாம் மாற்றியது லோகேஷ் கனகராஜ் தான். ஏனென்றால், விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரம் மூலம் எனக்கு வேறொரு பரிமாணத்தை கொடுத்தார்.
நான் உண்மையாகவே சொல்கிறேன் என்னைவிட எல்லாவற்றிலும் என்னுடைய தம்பி கார்த்தி சிறந்தவன். என்னை விட குடும்பத்திற்கு அதிக நேரம் செலவிடுவான். அது மட்டுமில்லை எங்களுடைய அப்பா – அம்மாவை அழைத்துக் கொண்டு ஒரு வருஷத்திற்கு 2 முறையாவது வெளிநாட்டுக்கு சுற்றுல்லா அழைத்து சென்றுவிடுவான்” எனவும் நடிகர் சூர்யா தனது தம்பியை பற்றி மனம் திறந்து பாராட்டி பேசி உள்ளார்.
+ There are no comments
Add yours