நீலகிரியில் மக்களை அச்சுறுத்தி வந்த கரடி ஒன்று, இரண்டு மாதங்களுக்கு பிறகு வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கி உள்ளதையடுத்து, பொதுமக்கள் சற்றே ஆறுதல் அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள பந்தலூர், உப்பட்டி, அத்திகுன்னா, பந்தலூர் இரும்பு பாலம், இன்கோ நகர், காலனி அட்டி, நெல்லியாலம், டான்டீ உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக கரடி ஒன்று சுற்றி திரிந்து வந்தது. குடியிருப்பு பகுதிகளுக்குள் அடிக்கடி நுழைந்து வந்த இந்த கரடி, வீடுகள் மற்றும் கோயில்களுக்குள் புகுந்து அங்கு வைக்கப்பட்டிருக்கும் பொருட்களை சேதப்படுத்தி வந்தது. குறிப்பாக வீட்டில் உள்ள எண்ணெய் உள்ளிட்டவற்றை உடைத்து குடித்து வந்தது.
கரடியின் அட்டகாசம் அதிகரித்ததால் அதனை பிடித்து வேறு பகுதியில்விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் இரவு நேரத்தில் வெளியே நடமாட அச்சமாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து கரடியை பிடித்து வேறு பகுதியில் விடுவதற்காக, முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் வெங்கடேஷ் உத்தரவின் பேரில், கூடலூர் மாவட்ட வன அலுவலர் ஓம்கார் உள்ளிட்ட அதிகாரிகள் கரடி நடமாட்டம் உள்ள பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அத்திகுன்னா, அத்திமாநகர், பவழம்புழா உள்ளிட்ட ஐந்து இடங்களில் கரடியை பிடிக்க கூண்டு வைத்து கண்காணிப்பு பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் அத்திமாநகர் பகுதியில் வனத்துறையினர் வைத்திருந்த கூண்டில் கரடி சிக்கியது. கரடி சிக்கிய தகவலை அறிந்து வன ஊழியர்கள், வனத்துறை உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தொடர்ந்து பிடிபட்ட கரடியின் உடல் நிலையை கால்நடை மருத்துவர் ராஜேஷ் பரிசோதித்தார்.
இதைத் தொடர்ந்து வனத்துறையினர் கூண்டில் சிக்கிய கரடியை லாரியில் ஏற்றி முதுமலைக்கு கொண்டு சென்றனர். இன்று அதிகாலை முதுமலை வனப்பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் கரடி விடுவிக்கப்பட்டது. கடந்த 2 மாதங்களாக கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் மக்களை அச்சுறுத்தி வந்த கரடி சிக்கி உள்ளதால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
+ There are no comments
Add yours