மத்திய அரசின் எச்சரிக்கைக்கு ஆளாகி வரும் ஓடிடி தளங்கள் !

Spread the love

இந்தியாவில் ஓடிடி தளங்களும் அவற்றின் படைப்புகளும் அடிக்கடி அரசின் எச்சரிக்கைக்கு ஆளாகி வருவதன் மத்தியில், மற்றுமொருமுறை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரால் குட்டுபட்டிருக்கிறது.

பொழுதுபோக்கின் நவீன வடிவமாக ஓடிடி தளங்கள் பெரும் வரவேற்பு பெற்று வருகின்றன. இந்திய சந்தையை குறிவைத்து களமிறங்கும் சர்வதேச ஓடிடி தளங்களுக்கு போட்டியாக இந்தியாவின் பிராந்திய அளவிலான ஓடிடி தளங்களும் நாளுக்கு நாள் உதயமாகின்றன. இவற்றில் எதை பார்ப்பது எதை விடுப்பது என்று ரசிகர்களுக்கு தடுமாற்றம் ஏற்படும் அளவுக்கு இந்த ஓடிடி தளங்களில் படைப்புகள் குவிந்து வருகின்றன. இவற்றின் மத்தியில் இந்த ஓடிடி தளங்களில் வெளியாகும் படைப்புகள் சர்ச்சைக்கும் ஆளாகி வருகின்றன.

இணையத்தில் வெளியாகும் படைப்புகளின் வரிசையில் ஓடிடி தளங்களும், எந்த தணிக்கை வரையறையும் இன்றி தங்கள் படைப்புகளை வெளியிட்டு வருகின்றன. இதனால் திரைப்படங்களில் காண வாய்ப்பில்லாத வன்முறை, ஆபாசம் உள்ளிட்டவை ஓடிடி படைப்பில் வெளியாகி பார்வையாளரை நெளியச் செய்கின்றன. படைப்பின் தேவை என்ற பெயரிலும், உள்ளடக்கத்தின் தீவிரம் மற்றும் காத்திரத்தின் பொருட்டும் இத்தகைய வீரிய வன்முறை, ஆபாசம், வசை மொழி உள்ளிட்டவை ஓடிடி தளங்களில் அதிகரித்து வருகின்றன.

மதவழிபாடு மற்றும் ஆன்மிகத்தின் பெயரிலான மோசடிகளும் ஓடிடியில் வெளியாகும்போது அவை பொதுவெளியில் அதிருப்தியை பெறுகின்றன. தனிநபரின் மதநம்பிக்கையை புண்படுத்துவதாகவும், நாட்டின் பெருமிதம் மற்றும் கலாச்சாரத்துக்கு இழுக்கு சேர்ப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

அவற்றையே மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரும் தற்போது எதிரொலித்திருக்கிறார். ’ஓடிடி தளங்களுக்கு அரசு ஆதரவளிக்கும் அதே வேளையில், ஓடிடி தளங்களுக்கு சுய கட்டுப்பாட் அவசியம் என்றும், அவை நமது கலாச்சாரத்துக்கு பங்கம் விளைவிப்பதை பார்த்துக்கொண்டிருக்க முடியாது’ என்றும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

மூத்த பத்திரிகையாளர் ஸ்ரீ ஆனந்த் விஜய் எழுதிய ‘ஓவர் தி டாப் கா மாயாஜால்’ புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் பேசிய அனுராக் தாக்கூர், “ஆரோக்கியமான சமூகத்தின் வளர்ச்சிக்கு ஆரோக்கியமான பொழுதுபோக்கு முக்கியம். எனவே ஓடிடி தளங்களுக்கு சுய கட்டுப்பாடு என்பதும் அவசியம். அநாகரீகமான அல்லது கலாச்சார உணர்வற்ற உள்ளடக்கங்கள் கூடாது. கலைச் சுதந்திரம் என்பது சமூக விழுமியங்களைக் குறைமதிப்புக்கு ஆளாக்கவோ, ஆபாசத்தை ஊக்குவிக்கவோ கூடாது” என்றும் எச்சரித்தார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours