சென்னை: ‘வடக்கன்’ திரைப்படத்தின் தலைப்பு சென்சார் போர்டு அனுமதி மறுத்துள்ளதால் படத்தை திட்டமிட்ட தேதியில் வெளியிட இயலவில்லை என்று படக்குழு தெரிவித்துள்ளது.
எழுத்தாளரும் கதை, வசனகர்த்தாவுமான பாஸ்கர் சக்தி, இயக்குநராக அறிமுகமாகும் படம், ‘வடக்கன்’. இதில் குங்குமராஜ், வைரமாலா ஜோடியாக நடித்துள்ளனர். ரமேஷ் வைத்யா, பர்வேஸ் மெஹ்ரூ, சமிரா என பலர் நடித்துள்ள இந்தப் படத்தை டிஸ்கவரி சினிமாஸ் சார்பில் மு.வேடியப்பன் தயாரித்துள்ளார்.
எஸ்.ஜே.ஜனனி இசையமைத்துள்ள இப்படத்துக்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதன் டீஸர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் வழங்கும் இப்படம் வரும் 24-ம் தேதி வெளியாக இருந்தது.
அண்மையில் இந்தப் படம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. படத்தைப் பார்த்த அதிகாரிகள், ‘வடக்கன்’ என்ற தலைப்பை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இந்த தலைப்புக்கு பதில் ‘வடக்கு’ என்ற தலைப்புக்கு படக்குழு அனுமதி கேட்டதாகவும், ஆனால் அதற்கும் சென்சார் போர்டு அனுமதி மறுத்துவிட்டதாகவும் தெரிகிறது.
+ There are no comments
Add yours