கடந்த வருடம் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு பரிசுகள் கொடுத்து ஊக்குவித்தார் நடிகர் விஜய். அதேபோல, இந்த வருடம் மாணவர்களுக்கு என்ன திட்டம் வைத்திருக்கிறார் என எதிர்பார்ப்பில் உள்ளனர் ரசிகர்கள்.
நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் ஆரம்பித்தார். ஆனால், அதற்கு முன்னரே மக்களுக்கான நலத்திட்டங்களை தனது சொந்த செலவில் செய்து கவனம் ஈர்த்தார். அதில் பெரிதும் பேசுபொருளானது ‘விஜய் கல்வி விருது விழா’தான். பள்ளிக் கல்வியில் முக்கியமான காலக்கட்டமாக கருதப்படுவது பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகள்தான்.
அரசியலுக்கு வந்திருக்கும் விஜய், கடந்த ஆண்டு இந்த பொதுத்தேர்வுகளில் 234 தொகுதிகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களை சென்னைக்கு வரவழைத்து அவர்களுக்கு ஊக்கத்தொகை கொடுத்து அசத்தினார். இதுமட்டுமல்லாது, +2-வில் 600/600 மதிப்பெண்கள் எடுத்த மாணவி நந்தினிக்கு வைர நெக்லஸ் கொடுத்தது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.
அந்த விழாவில் கிட்டத்தட்ட 10 மணி நேரத்திற்கும் மேலாக நின்று கொண்டே விஜய் பங்கேற்றார். மேடையில் விஜயின் விசிறியாக மாறிய பல மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் செய்த கியூட்டான விஷயங்கள் அப்போது வைரலானது.
கடந்த வருடம் விஜயின் அரசியல் வருகைக்கு அச்சாரமிட்ட இந்த கல்வி விருது விழா இந்த வருடமும் நடைபெறுமா என ரசிகர்கள் எதிர்நோக்கியுள்ளனர். ஏனெனில், அடுத்த தலைமுறை வாக்காளர்களை கவரும் விதமாகவே விஜய் இந்த கல்வி விருது விழாவை முன்னெடுத்தார் என்பது அந்த நிகழ்ச்சியின் மூலம் தெளிவாகவே தெரிய வந்தது.
ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் நடிகர் விஜயும் இதனை உறுதிப்படுத்தி இருக்கிறார். தன்னுடைய தமிழக வெற்றிக் கழகத்தின் சமூகவலைதளப் பக்கங்களில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து சொல்லி இருக்கிறார். இதோடு, ‘விரைவில் நாம் சந்திப்போம்!’ என்றும் கல்வி விருது விழாவை உறுதிபடுத்தியிருக்கிறார்.
தமிழ்நாடு, புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்ற 12 மற்றும் 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள். மற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயன்று, வெற்றி பெற வாழ்த்துகள்.
விரைவில் நாம் சந்திப்போம்! pic.twitter.com/OUYZYhl5Ni
— TVK Vijay (@tvkvijayhq) May 10, 2024
அடுத்த மாதம் விஜயின் ஐம்பதாவது பிறந்த நாளும் வருகிறது. இதனையொட்டி விரைவில் மாணவர்களுக்கான நிகழ்வை அறிவிப்பார்கள் என்று எதிர்பாக்கலாம். வருடா வருடம் இதனை அவர் தொடர்ந்து செய்ய வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். தமிழக வெற்றிக் கழகமும் இதனை முன்னெடுக்கும் எனவும் விஜய் தரப்பு சொல்கிறது.
+ There are no comments
Add yours