2024 வசூலில் பட்டையை கிளப்பிய திரைப்படங்கள்

Spread the love

தமிழ் சினிமாவில் 2024-ம் ஆண்டு அதிக வசூலை ஈட்டிய திரைப்படங்கள் குறித்த விரைவுப் பார்வை இது. இந்தப் பட்டியலில் ரூ.455 கோடி வசூலுடன் விஜய்யின் ‘தி கோட்’ படம் முதலிடத்திலும், ரூ.330 கோடிக்கும் அதிகமான வசூலுடன் சிவகாரத்திகேயனின் ‘அமரன்’ இரண்டாம் இடத்திலும் உள்ளன. இந்தப் பட்டியலில் சில பல சர்ப்ரைஸ்களும் உள்ளன.

தி கோட்: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. ரூ.350 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் உலக அளவில் ரூ.455 கோடியை வசூலித்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. டி-ஏஜிங் தொழில்நுட்பம், சிவகார்த்திகேயனின் கேமியோ, த்ரிஷாவின் நடனம், நடிகர்கள் பட்டாளம், இரட்டை வேடத்தில் விஜய் என அனைத்தும் கலந்த கலவையாக வெளியான படம் அயற்சியில்லாத திரைக்கதையால் ஸ்கோர் செய்தது.

அமரன்: இந்த ஆண்டின் ‘சர்ப்ரைஸ்’ பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் என்றால் அது ‘அமரன்’. மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோபிக்காக உருவான இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயன், சாய் பல்லவி முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். கமல்ஹாசன் தயாரித்த இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ரூ.120 கோடி பட்ஜெட் என கூறப்படும் இப்படம் உலக அளவில் ரூ.330 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. தமிழ் சினிமாவின் இரண்டாவது பெரிய வசூல்.

வேட்டையன்: போலீஸ் என்கவுன்டருக்கு எதிராகவும், நுழைத் தேர்வு பயிற்சி மையங்களின் மோசடிகளை தோலுரிக்கும் படமாகவும் அமைந்தது த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘வேட்டையன்’. ஃபஹத் ஃபாசில், அமிதாப்பச்சன், ராணா, மஞ்சுவாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் என நடிகர் பட்டாளமே நடித்தனர். அனிருத் இசையமைத்த இந்தப் படத்தின் பட்ஜெட் ரூ.200 கோடி ப்ளஸ் என கூறப்படுகிறது. இப்படம் உலக அளவில் ரூ.253 கோடியை வசூலித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

மகாராஜா: ரூ.40 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் ஒரு படம் ரூ.165 கோடி வசூலை எட்டியது என்றால், அதற்கு அதன் உள்ளடக்கம் காரணம். அப்படியான ஓர் உள்ளடக்கத்தையும், திரைக்கதையும் கொண்ட ‘மகாராஜா’ விஜய் சேதுபதியின் 50-வது படம். நிதிலன் இயக்கிய இந்தப் படத்தில் அனுராக் காஷ்யப் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சீனாவில் வெளியிடப்பட்டுள்ள இப்படம், 10 நாட்களில் ரூ.58 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக பேசிய இப்படம் நான் லீனியர் திரைக்கதையால் ஈர்க்கப்பட்டது.

ராயன்: தன் குடும்பத்தை காக்க எந்த எல்லைக்கும் செல்லும் ஒருவனின் பாசம், அவர் சந்திக்கும் துரோகம், பழிவாங்கும் உணர்வை திரையில் ‘ராயன்’ ஆக்கினார் தனுஷ். அவரே இயக்கி நடித்த இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். உலகளவில் ரூ.154 கோடி வசூல் செய்து நான்காவது இடத்தை பெற்றுள்ள இப்படம் ஓடிடி வெளியீட்டில் கலவையான விமர்சனங்களுக்கு உள்ளானது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘உசுரே நீ தானே’ என்ற வரிகள் இடம்பெற்ற ‘அடங்காத அசுரன்’ பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டடித்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியன் 2: ஊழலுக்கு எதிராக கமலும் – ஷங்கரும் இணைந்து ஆடிய களம் தான் ‘இந்தியன் 2’. எஸ்.ஜே.சூர்யா, ரகுல் ப்ரீத்சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். படம் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. ரூ.200 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டை கொண்ட படம், உலக அளவில் ரூ.140 கோடியை நெருங்கியதாக தகவல்கள் கூறின. இதன் மூலம், இப்படம் நஷ்டத்தை எதிர்கொண்டதாக கூறப்படுகிறது.

கங்குவா: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ திரைப்படத்தை ஞானவேல் ராஜா தயாரித்தார். படம் ரூ.300 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டது. தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். எதிர்மறை விமர்சனங்களால் படம் பட்ஜெட்டை நெருங்கவில்லை. உலக அளவில் ரூ.110 கோடி வரை வசூலித்ததாக கூறப்படுகிறது. படத்தின் மீதான அதீத எதிர்பார்ப்பும், அதை ஈடு செய்ய முடியாத திரைக்கதையும் படத்தின் தோல்விக்கு காரணமாக அமைந்தன.

அரண்மனை 4: சுந்தர்.சி இயக்கத்தில் கோடையில் குழந்தைகளை குறிவைத்து வெளியான திகில் – காமெடி படமான ‘அரண்மனை 4’ ரூ.100 கோடி வசூலை எட்டி வரவேற்பை பெற்றது. ஆனால், ஓடிடியில் படம் எதிர்மறை விமர்சனத்தை பெற்றது. தமன்னா, ராஷிகண்ணா, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிந்த இந்தப் படத்துக்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்தார். படத்தின் பட்ஜெட் ரூ.40 கோடி என கூறப்படுகிறது.

தங்கலான்: பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்த திரைப்படம் ‘தங்கலான்’. கோலார் தங்க வயலை பின்னணியாக கொண்டு ஆதிக்கம், சுரண்டலுக்கு எதிராக மேஜிக்கல் ரியலிசம் திரைக்கதை புதுமை கொடுத்தது. இசையில் ஜி.வி.பிரகாஷ் கவனிக்க வைத்தார். ரூ.70 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் உலகம் முழுவதும் ரூ.80 கோடி வசூலை நெருங்கியது.

டிமான்டி காலனி 2: அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள் நிதி நடித்த திரைப்படம் ‘டிமான்டி காலனி 2’. பிரியா பவானி சங்கர் நாயகியாக நடித்தார். ஹாரர் படத்துக்கான எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த படம் உலக அளவில் ரூ.50 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்தது. சாம்.சி.எஸ்ஸின் அச்சுறுத்தும் இசை படத்துக்கு பலம்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours