படத்தின் இயக்குனர் சூழ்நிலையை சொல்ல, அதை புரிந்துகொண்ட கண்ணதாசன் – எம்.எஸ்.வி இருவரும் உடனடியாக பாடல் எழுதி டியூன் போட்டு தயார் செய்த நிலையில், அந்த பாடலை இயக்குனர் பிடிக்கவில்லை என்று கூறியுள்ளார். அதன்பிறகு கண்ணதாசன் எம்.எஸ்.வி இருவரும் சேர்ந்து ஒரு குட்டி கலாட்டா செய்துள்ளனர்.
1964-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் சரோஜா தேவி நடிப்பில் வெளியான படம் என் கடமை. எம்.ஜி.ஆர் போலீஸ் அதிகாரியாக நடித்த இந்த படத்தில், எம்.ஆர்.ராதா, நம்பியார், நாகேஷ், மனோரமா உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்க, கவியரசர் கண்ணதாசன் அனைத்து பாடல்களையும் எழுதியிருந்தார். இந்த படத்தை நடேசன் என்பவர் இயக்கி தயாரித்திருந்தார்.
ஒரு வழக்கு விசாரணைக்காக ஒரு ஏரியாவில் வீடு எடுத்து தங்கியிருக்கும் எம்.ஜி.ஆர் மீது பக்கத்து வீட்டில் இருக்கும் சரோஜா தேவிக்கு காதல். ஒருநாள் எம்.ஜி.ஆர் இல்லாத நேரத்தில் அவரது வீட்டுக்கு சரோஜா தேவி போகிறார். அந்த நேரத்தில் வரும் எம்.ஜி.ஆர், நாம் ஒரு அறையில் இருப்பதை யாராவது பார்த்தால் தவறாகிவிடும் அதனால் இப்போதே இங்கிருந்து போய்விடு என்று எம்.ஜி.ஆர் சொல்கிறார்.
எம்.ஜி.ஆரின் இந்த பேச்சை கேட்ட சரோஜா தேவி கோபமாக கிளம்ப, அவரை சமாதானப்படுத்த எம.ஜி.ஆர் ஒரு பாடல் பாடுகிறார். இந்த இடத்தில் ஒரு பாடல் வேண்டும் என்று இயக்குனர் சொல்ல, சூழ்நிலை புதுமையாக இருக்கிறதே என்று எம்.எஸ்.வி உடனடியாக டியூன்போட, அதே சிந்தனையில் கண்ணதாசன் பாடல் வரிகளை சொல்ல, சில நிமிடங்களில் இந்த பாடல் தயாராகிவிடுகிறது. இந்த பாடலை கேட்ட தயாரிப்பாளரும் இயக்குனருமான நடேசன் பிடிக்கவில்லை என்று சொல்கிறார்.
டியூன் பாடல் எல்லாமே நல்லாதானே இருகிறது ஏன் வேண்டாம் என்று சொல்றீங்க என்று எம்.எஸ்.வி கேட்க, நான் உங்களுக்கு சம்பளம் தருகிறேன் அல்லவா, அதற்காக நீங்கள் கொஞ்சம் கூட உழைக்காமல் நான் சூழ்நிலையை சொன்ன சில நிமிடங்களிலேயே பாடலை கொடுத்துட்டீங்களே உங்களுக்கு சம்பளம் கிடையாது என்று கூறியுள்ளார். எளிமையாக கிடைக்கும் பொருள் தரமற்றது என்பதை போல் இந்த பாடல் சரியில்லை என்று நினைத்துள்ளார்.
இவரை சரிக்கட்ட யோசித்த கண்ணதாசன் – எம்.எஸ்.வி இருவரும் அடுத்த 2 நாட்கள் இந்த பாடலுக்காக கடுமையாக உழைப்பது போல் காட்டிக்கொண்டுள்ளனர். முதல் நாள் நடேசன் வந்தபோது, நீங்கள் சொன்னபடி கடுமையாக இந்த பாடலை தயார் செய்து கொண்டு இருக்கிறோம். நீங்கள் போய்ட்டு நாளைக்கு வாருங்கள் என்று கூறியுள்ளனர். அடுத்த 2 நாட்கள் கழித்து மீண்டும் அதே பாடலை கொண்டு போய் தயாரிப்பாளரிடம் கொடுத்துள்ளனர்.
அவரும் பரவாயில்லை நாம் சொன்னதற்காக கடுமையாக உழைத்து பாடலை தயார் செய்திருக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் அவர்களுக்கு சம்பளமும் கொடுத்துள்ளார். அந்த பாடல் தான் ”ஹலோ மிஸ், ஹலோ மிஸ் எங்கே போறீங்க” என்ற பாடல். இன்றும் இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை துரைசரவணன் என்பவர் தனது யூடியூப் சேனலில் குறிப்பிட்டுள்ளார்.
+ There are no comments
Add yours