தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமையில் ஜூலை மாதம் நடந்த கூட்டுக்கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், நடிகர் தனுஷ், முன்பணம் வாங்கிய தயாரிப்பாளர்களுக்கு கால்ஷீட் கொடுக்காததால், இனிமேல் அவரை வைத்து படம் தயாரிப்பவர்கள், தயாரிப்பாளர் சங்கத்திடம் கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நடிகர் சங்கம், தனுஷ்குறித்து யாரும் புகார் அளிக்கவில்லை என்று கூறியிருந்தது. இந்நிலையில் இதுகுறித்து இரு தரப்பும் பேசி முடிவெடுக்க நினைத்தன. சமீபத்தில் பேட்டியளித்த நடிகர் கார்த்தி, தனுஷ் பிரச்சினைக்கான தீர்வை தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் அளித்திருப்பதாகக் கூறியிருந்தார்.
இதற்கிடையே நடிகர் தனுஷ் தனது புதிய படத்தைத் தொடங்கினார். அதன் படப்பிடிப்புக்கு பெப்சி தொழிலாளர்கள் ஒத்துழைக்க மறுத்தனர். இதனால் தனுஷ் விவகாரம் குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது. அதில் உடன்பாடு ஏற்பட்டதாகத் தெரிகிறது.இந்நிலையில், நடிகர் சங்கத்துக்கு நன்றி தெரிவித்து தனுஷ் கடிதம் எழுதியுள்ளார். அதில்,“தயாரிப்பாளர்கள் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி மற்றும் ஃபைவ்ஸ்டார் கதிரேசன் எழுப்பிய புகார்களைத் தீர்க்க உதவிய நடிகர் சங்கத்துக்கு நன்றி.
உங்கள் சரியான தலையீடு மற்றும் நேர்மையான வழிகாட்டுதல், எங்களை நோக்கிய சவால்களைச் சமாளிக்கவும் பரஸ்பர நன்மைபயக்கும் உடன்பாட்டை அடையவும் உதவியது. அதனால் கடந்த 11-ம் தேதி எங்கள் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க முடிந்தது. இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உதவியதுமட்டுமல்லாமல், தொழில்துறைக்கு நேர்மறையான முன்னுதாரணத்தையும் நடிகர் சங்கம் அமைத்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்
+ There are no comments
Add yours