திருவனந்தபுரம்: பாலியல் புகாரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள மலையாள நடிகர் சித்திக்கின் முன் ஜாமீன் மனுவை கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதையடுத்து அவரை எப்போது வேண்டுமானாலும் காவல் துறை கைது செய்யலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஹேமா கமிட்டி அறிக்கை கேரள திரையுலகில் நிகழும் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது. இந்த அறிக்கை வெளியானதை தொடர்ந்து நடிகைகள் பலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர். அந்த வகையில் மலையாள துணை நடிகையான ரேவதி சம்பத், மூத்த நடிகர் சித்திக் மீது பாலியல் புகார் தெரிவித்திருந்தார். கடந்த 2016-ம் ஆண்டு திருவனந்தபுரத்தில் உள்ள மஸ்கட் ஹோட்டலில் வைத்து தன்னை சித்திக் பாலியல் வன்கொடுமை செய்தார் என சிறப்பு புலனாய்வு குழுவில் (SIT) புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து திருவனந்தபுரம் அருங்காட்சியக காவல்துறையினர் சித்திக் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
தொடர்ந்து நடிகர் சித்திக் முன் ஜாமீன் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது. இதனால் சித்திக் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கேரள உயர்நீதிமன்ற தீர்ப்பின் முழு விவரங்களும் கிடைக்கப்பெற்ற பின், சித்திக்கின் வழக்கறிஞர் முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தை நாட உள்ளதாக கூறப்படுகிறது. சித்திக் எங்கும் தப்பிச் செல்லாத வகையில் அவருக்கு எதிராக விமான நிலையங்களில் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
+ There are no comments
Add yours