இயக்குநர் பாலா இயக்கத்தில், அருண் விஜய் நாயகனாக நடித்துள்ள படம் ‘வணங்கான்’. இந்தப் படம் வரும் பொங்கல் (2025) திருநாள் வெளியீடாக ரிலீஸ் ஆகிறது என்பதை படக்குழு அறிவித்துள்ளது. அருண் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அருண் விஜய்யுடன் ரோஷினி பிரகாஷ் நாயகியாக நடித்துள்ளார். மேலும், சமுத்திரக்கனி, மிஷ்கின் உட்பட பலர் நடித்துள்ளனர். வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி, மற்றும் பாலாவின் பி ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார்.
கடந்த ஜூலையில் இந்தப் படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டது. இந்நிலையில், இந்தப் படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வருகிறது என்பதை படக்குழு தற்போது போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது. இந்தப் படத்துக்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளது.
“தித்திக்கும் உங்களின் இப் பிறந்த நாளில் தமிழர் திருநாளாம் பொங்கல் நாளில் வணங்கான் வெளியீடு என்ற கரும்பின் சுவையைப் பரிசாகத் தருகிறோம். மகிழ்ச்சியின் இனிப்பு மனதாரப் பரவி, புன்னகை என்றும் எங்கும் வழிந்தோடி, வெற்றியின் பிள்ளைகளைத் தாலாட்டி வென்று வாழ இயற்கையும்.. இறையும் துணை புரியட்டும். இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அருண் விஜய்” என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.
தனது திரையுலக பயணத்தில், வணங்கான் ஒரு மிக முக்கியமான பாகமாக அமையும் என நேற்று நடிகர் அருண் விஜய் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours