கேரவனில் கேமரா.. ராதிகாவின் புகார் குறித்து சரத்குமார் விளக்கம்

Spread the love

ஹேமா கமிட்டி குறித்தும் நடிகை ராதிகாவின் ‘கேரவனில் கேமரா’ புகார் குறித்தும் நடிகர் சரத்குமார் நேற்று மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியிருக்கிறார்.

பாஜக மாநில பொதுச் செயலாளர் இராம. ஸ்ரீனிவாசனின் 61 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நேற்று மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு இலவச சீருடை, மத்திய அரசின் 5 லட்சம் மதிப்புள்ள காப்பீடு அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் சரத்குமார், “சினிமா துறையில் உள்ள பிரச்சினைகளை அறிய இந்தியாவில் முதன் முறையாக ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டது. ஹேமா கமிட்டி அறிக்கையில் சினிமா துறை சுகாதார சீர்கேடாக உள்ளதாகவும், பாலியல் துன்புறுத்தல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாரையும் அவதூறு பரப்பும் நோக்கில் குறிப்பிட்ட பெயரை சொல்லி ஹேமா கமிட்டி அறிக்கை சொல்லவில்லை. கேரள நடிகர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தலில் ஈடுபட்டதாக வழக்குகள் பதியப்பட்டு வருகிறது. கேரள நடிகர்கள் தவறு செய்துள்ளார்களா? இல்லையா? என்பதை நிரூபிக்கப்பட வேண்டியது அவர்களது கடமை. சினிமாத்துறை மட்டுமல்ல காவல்துறை உள்ளிட்ட எல்லா துறைகளிலும் பாலியல் குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறது, நிர்பயா கொலை வழக்கு, கொல்கத்தா மருத்துவர் கொலை போன்ற சம்பவங்கள் எல்லா இடங்களிலும் நடக்கிறது.

பிறர் என்ன செய்தார்கள் என்று யோசிப்பதை விட நாம் நம் மக்களை எவ்வாறு சீர்படுத்தி கொள்ள வேண்டும். எப்படி வளர்க்க வேண்டும் என்பதை பற்றி தான் நான் நினைப்பேன். என் மனைவி ஏன் அன்று சொல்லவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். அவரை மட்டும் குற்றம் சொல்லாதீர்கள். என் மனைவிக்கு கடந்து போக கூடிய சக்தி இருந்ததால் அவர் அன்று சொல்லாமல் இருந்திருக்கலாம். நாம் பெண்களை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான தண்டனை இருக்கிறது என்று தெரிந்தால் தான் இதை திருத்த முடியும்.

பிக்பாஸ் நடிகை யாரும் என்னிடம் புகார் கொடுத்தது கிடையாது. நான் பிக்பாஸ் நிகழ்ச்சியே பார்ப்பது இல்லை. மற்றவர்களை போல் சாதாரண தலைவன் கிடையாது. என்னிடம் புகார் கொடுத்தால் உடனடியாக நடவடிக்கை எடுப்பேன். ஹேமா கமிட்டி போல எல்லா இடத்திலும் கமிட்டி அமைக்க வேண்டும், அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீதே குற்றச்சாட்டு உள்ளது. நாம் பெண்களை மதிக்க கற்றுக்கொண்டு பெண்களுக்கு பாதுகாப்பு அளித்தால் தவறுகள் நடைபெறாது” என்றார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours