‘எமர்ஜென்சி’ படத்துக்கு சென்சார் சான்றிதழ்

Spread the love

மும்பை: தான் இயக்கியுள்ள ‘எமர்ஜென்சி’ படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: “எமர்ஜென்சி படத்துக்கு சென்சார் சான்றிதழ் கிடைத்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். படத்தின் ரிலீஸ் தேதியை விரைவில் அறிவிப்போம். பொறுமையுடன் காத்திருந்து ஆதரவளித்ததற்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.

எமர்ஜென்சி சென்சார் பிரச்சினை: நடிகையும் பாஜக மக்களவை உறுப்பினருமான கங்கனா ரனாவத் தயாரித்து இயக்கியுள்ள படம், ‘எமர்ஜென்சி’. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட அவசர நிலையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது. கங்கனா ரனாவத், இந்திரா காந்தியாக நடித்துள்ளார். இப்படம் செப்.6-ல் வெளியாக இருந்தது. இதில் சீக்கியர்களைத் தவறாக சித்தரித்துள்ளதாக சீக்கிய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. தடை விதிக்கக் கோரி வழக்குகள் தொடுக்கப்பட்டன. சண்டிகரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில், பார் கவுன்சில் முன்னாள் தலைவர் ரவீந்தர் சிங் பாஸி, தாக்கல் செய்த மனுவில், இந்தப் படத்தில் சீக்கிய சமூகத்துக்கு எதிராகப் பொய்யான குற்றச்சாட்டுகள் இடம் பெற்றுள்ளதாகவும் சீக்கியர்களின் மதிப்பை கங்கனா கெடுக்க முயன்றுள்ளார் என்றும் கூறியிருந்தார்.

இது தொடர்பான வழக்கு மும்பை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றபட்டது. இந்த விவகாரத்தில் விரைந்து முடிவெடுக்க மும்பை உயர்நீதிமன்றம் சென்சார் போர்டுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து சர்ச்சைக்குரிய சில காட்சிகளை நீக்கினால் மட்டுமே படத்துக்கு சான்றிதழ் தர முடியும் என சென்சார் போர்டு கடந்த மாதம் நீதிமன்றத்தில் தெரிவித்தது. அதன்படி சென்சார் போர்டு வலியுறுத்திய காட்சிகளை நீக்க கங்கனா ஒப்புக்கொண்டதையடுத்து சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours