சென்னை: நகைச்சுவை நடிகர், பாடகர் சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாறு படமாகிறது.
பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்று படங்களுக்கு தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு. மகாத்மா காந்தி, மேரிகோம், எம்.எஸ். தோனி, நடிகை சாவித்ரி உள்ளிட்ட பல பிரபலங்களுடைய வாழ்க்கை வரலாறு படமாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பும் பெற்றிருக்கிறது. அந்த வரிசையில் இப்போது காலஞ்சென்ற நகைச்சுவை மேதை, நடிகர், பாடகர் சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாற்றை பயோபிக்காக எடுக்க அவரது சகோதரர் ஜவஹரிடமிருந்து அனுமதி பெற்றுள்ளதாக தயாரிப்பு நிறுவனமான குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் உறுதிப்படுத்தியுள்ளது. மூத்த எழுத்தாளரும் இயக்குநருமான கே. ராஜேஷ்வர் எழுதிய ’JP: THE LEGEND OF CHANDRABABU’ நாவலின் உரிமையை தயாரிப்பு நிறுவனம் பெற்றுள்ளது. ’சட்டம் என் கையில்’, ‘சவால்’ உள்ளிட்டப் பல படங்களில் தனது தேர்ந்த நடிப்பின் மூலம் தனித்துவமான உடல்மொழியாலும் ஈர்த்தவர் சந்திரபாபு.
சந்திரபாபு படத்திற்கான திரைக்கதை மற்றும் வசனத்தை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதுகிறார். கதையை மேலும் மேம்படுத்த, பாடலாசிரியரும் எழுத்தாளருமான மதன் கார்க்கி கூடுதல் திரைக்கதை, வசனங்கள் மற்றும் பாடல் வரிகளை எழுதுகிறார். இந்தப் படம் சந்திரபாபுவுக்கு மறக்க முடியாத அஞ்சலியாக இருக்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. விரைவில் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழு பற்றிய அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கலாம்.
+ There are no comments
Add yours