சென்னை: கடந்த வாரம் ஆகஸ்ட் 15 சுதந்திரம் தினத்தன்று தமிழில் மூன்று படங்கள் வெளியாகின. பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘தங்கலான்’, அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடித்த ‘டிமாண்டி காலனி 2’, கீர்த்தி சுரேஷின் ‘ரகு தாத்தா’.
இதில் ‘தங்கலான்’, ‘டிமாண்டி காலனி’ இரண்டு படங்களுக்குமே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. பா.ரஞ்சித் – விக்ரம் கூட்டணி, ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் ஏற்படுத்திய தாக்கம் ஆகியவற்றால் இயல்பாகவே ‘தங்கலான்’ படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இன்னொரு பக்கம் பெரிய ஹிட்டடித்த ‘டிமாண்டி காலனி’ படத்தின் இரண்டாம் பாகம், நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு சீரியஸ் பேய்ப் படம் என்பதால் ‘டிமாண்டி காலனி 2’-வுக்கும் நல்ல ஓபனிங் இருந்தது.
இதுதவிர இந்த இரண்டு படங்களுக்குமே பெரிய அளவில் விளம்பரங்களும் செய்யப்பட்டன. இதில் சொல்லிக் கொள்ளும்படி விளம்பரங்களோ, பெரிய எதிர்பார்ப்புகளோ இல்லாமல் வெளியானது ‘ரகு தாத்தா’ மட்டுமே.
எதிர்பார்ப்பு காரணமாக ‘தங்கலான்’ படத்துக்கு முதல் நாளில் நல்ல ஓபனிங் கிடைத்தது. உலகம் முழுவதும் ரூ.26.44 கோடி வசூல் செய்தது. இது விக்ரம் படங்களின் முந்தைய வசூலை விட அதிகம். எனினும் நெகட்டிவ் விமர்சனங்கள், சவுண்ட் பிரச்சினை என அடுத்தடுத்த நாட்கள் வசூலில் படம் தடுமாறியது. படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.150 கோடி என்ற சொல்லப்படும் நிலையில், தற்போது ஆறு நாட்கள் வசூலாக இந்தியாவில் ரூ.34 கோடியும், உலகம் முழுவதும் ரூ.52 கோடியும் ‘தங்கலான்’ வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
’டிமாண்டி காலனி 2’ படத்தை பொறுத்தவரை கலவையான விமர்சனங்கள் கிடைத்ததாலும் பேய்ப் படத்துக்கே உரிய எதிர்பார்ப்பினாலும் வசூலில் முன்னேற்றம் கண்டுள்ளது. ‘தங்கலான்’ தடுமாறியதால் பல திரையரங்குகளில் இந்த படத்துக்கான காட்சிகளும் அதிகரிக்கப்பட்டன. அந்த வகையில் குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் கடந்த 6 நாட்களில் இந்தியாவில் ரூ.18 கோடியும், உலகம் முழுவதும் ரூ. 25 கோடியும் வசூலித்துள்ளது.
கீர்த்தி சுரேஷின் ‘ரகு தாத்தா’ படத்துக்கு தொடக்கம் முதலே படக்குழுவினர் பெரியளவில் விளம்பரத்தில் ஆர்வம் காட்டவில்லை. கீர்த்தி சுரேஷ் கொடுத்த ஓரிரு பேட்டிகளோடு சரி. அத்துடன் பெரிதாக சமூக வலைதளங்களில் பேசப்படவில்லை. விமர்சகர்கள் பெரும்பாலும் இப்படத்தை பாசிட்டிவ் ஆகவே விமர்சித்திருந்தனர். எனினும், இப்படம் ஆறு நாட்களில் உலகம் முழுவதும் ரூ. 2.49 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது.
+ There are no comments
Add yours