முதல் பாகத்தில், வீட்டிலிருந்து தப்பிக்கும்போது உயிரிழப்பதைப் போல காட்டப்படும் சீனிவாசன் (அருள்நிதி), கோமா நிலையில் சிகிச்சையில் இருக்கிறார். அவருடைய சகோதரர் ரகு (இன்னொரு அருள்நிதி) தந்தையின் சொத்து தனக்கு மட்டுமே வர வேண்டும் என்று போராடுகிறார். இன்னொரு பக்கம், அன்புக் கணவரின் மரணத்தில் மர்மம் இருப்பதாக நினைக்கும் டெபி (பிரியா பவானி சங்கர்) அதைப் புத்தத் துறவி உதவியுடன் அறிய களமிறங்குகிறார். இந்த மூவரின் கதையும் ஒரு புள்ளியில் இணைகிறது. இவர்கள் உயிரைக் காவு வாங்க நினைக்கும் ‘டிமான்ட்டி காலனி’ பேயின் ஆத்திரமும் தெரிய வருகிறது. அதைத் தடுக்க அருள்நிதியும், பிரியா பவானி சங்கரும் என்னென்ன செய்கிறார்கள் என்பது கதை.
2015-ல் வெளியான டிமான்ட்டி காலனியின் தொடர்ச்சியாக வந்திருக்கும் படம் இது. முதல் பாகத்துக்குச் சற்றும் சம்பந்தமில்லாமல் இரண்டாம் பாகப் படங்கள் வரும் காலத்தில், முதல் பாகத்தின் முடிவிலிருந்து கதையைத் தொடங்கியிருக்கும் இயக்குநர் அஜய் ஞானமுத்துவைப் பாராட்டலாம். முதல் பாகத்தோடு இரண்டாம் பாக ‘சீக்குவல்’களை எந்த நெருடலும் இல்லாமல் இணைத்திருக்கும் விதம், சபாஷ் போட வைக்கிறது. 2015, 2021-ல் நிகழும் சம்பவங்களை ஒன்றாக முடிச்சுப் போட்டு, த்ரில்லிங் குறையாமல் பார்த்துகொண்டதில் இயக்குநரின் கைவண்ணம் தெரிகிறது.
பேய்ப் படங்களுக்கே உரிய கோரமான மேக்அப், பயமுறுத்தும் காட்சிகளை நம்பாமல் ‘மேக்கிங்’ செய்திருக்கும் விதம் நன்றாகவே உள்ளது. பெரும்பாலும் திகில் படங்களில் லாஜிக் ஓட்டைகள் ஆங்காங்கே தலைகாட்டும். அதுபோன்ற ஓட்டைகளும் இல்லாமல் படம் தப்பிக்கிறது. குறைகள் இல்லாமல் இல்லை. த்ரில்லர் படங்களுக்கே உரிய ட்விஸ்டுகள் இருந்தாலும், அவற்றை எளிதாக ஊகிக்க முடிகின்றன. பேயைக் கட்டுப்படுத்தும் சாமியார்களின் போராட்டங்கள், பேய்க் குறியீடுகள் போன்ற வழக்கமான ‘டெம்ப்ளேட்டு’கள் இதிலும் உள்ளன.
‘டிமான்ட்டி காலனியிலிருந்து எடுத்துச் செல்லும் செயினுக்கும் அதை வைத்து திகில்களை நிகழ்த்தும் பேய்க்கும் உள்ள தொடர்பு, அந்தப் புத்தகத்துக்கும் காலனிக்கும் உள்ள தொடர்பு, குறிப்பிட்ட நபர்கள் மட்டும் அந்தப் புத்தகத்தைத் தேர்ந்தெடுத்தது எப்படி, ஏன் படிக்கிறார்கள் போன்ற கேள்விகள் படத்தின் முடிவில் இயல்பாக எழுகின்றன. மூன்றாம் பாகத்துக்கு ‘லீட்’ கொடுக்கும் இயக்குநர், அந்தப் பாகத்தில்தான் இதற்கெல்லாம் விடை சொல்வார் போல.
நாயகன் அருள்நிதிக்கு இரட்டை வேடமாக இருந்தாலும் ஒரு கதாபாத்திரத்துக்குத்தான் வேலை கொடுத்திருக்கிறார்கள். அதை அழகாகச் செய்திருக்கிறார். கணவரை இழந்து வாடும் பாத்திரத்திலும், துப்பறியும் பாத்திரத்திலும் சிறந்த நடிப்பை வழங்கியிருக்கிறார் பிரியா பவானி சங்கர். நாயகனைவிட இவருக்குத்தான் அழுத்தமான பாத்திரம். ‘சார்பட்டா’ முத்துக் குமாருக்கு முக்கியமான வேடம். அருண்பாண்டியன், அர்ச்சனா ரவிச்சந்திரன், மீனாட்சி கோவிந்தராஜன், சர்ஜனோ காலித், புத்த துறவியாக வரும் டோர்ஜி ஆகியோரும் நல்ல பங்களிப்பை வழங்கியுள்ளனர். த்ரில்லர் படத்துக்குரிய இசையைச் சரியாக வழங்கியிருக்கிறார் சாம் சி.எஸ். ஹரீஸ் கண்ணனின் ஒளிப்பதிவு இரவுக் காட்சிகளை அழகாகப் படம் பிடித்திருக்கிறது. கச்சிதமான படத்தொகுப்பில் குமரேசன்.டி.யின் உழைப்பு தெரிகிறது. வி.எஃப்.எக்ஸ். தொழில்நுட்பக் காட்சிகளை இன்னும் மேம்படுத்தியிருக்கலாம்.
+ There are no comments
Add yours