“அனைத்து சமூக மக்களும் வேலை செய்தால்தான் திரைப்படம் எடுக்க முடியும். அனைவரும் பார்த்தால் தான் வெற்றி பெற முடியும். சினிமா என்பது சாதி, மதம்,மொழி இதற்க்கெல்லாம் அப்பாற்பட்டது. எந்த ஒரு இயக்குநரும் சாதிகளை முன்வைத்து படங்களை இயக்குவதில்லை” என இயக்குநர் ஹரி தெரிவித்தார்.
திரைப்பட இயக்குநர் ஹரி புதுச்சேரிக்கு இன்று வந்திருந்தார். அவர் விஷால் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.‘ரத்னம்’ திரைப்படம் தொடர்பாக அவர்களிடம் பகிர்ந்து கொண்டு செல்ஃபி எடுத்து கொண்டார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் ஹரி கூறியதாவது: “நடிகர் விஷாலுக்கு மூன்றாவது திரைப்படமாக ‘ரத்னம்’ திரைப்படத்தை இயக்குகிறேன். சாலையில் செல்லும்போது ஒரு பிரச்சினையை கண்டால் யாரும் உதவ முன்வருவதில்லை. வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறோம். அப்படி உதவும் இளைஞனின் ஒரு கதை தான் இது.
‘கில்லி’ திரைப்படம் மறுபடியும் திரையரங்கில் வெளியிடப்பட்டுள்ளது. நல்ல படங்கள் எப்போது வெளிவந்தாலும் அதை பார்ப்பதற்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதையே இந்த ரி-ரிலீஸ் காட்டுகிறது. இதை பார்க்கும்போது நாமும் நல்ல படங்களை எடுக்க வேண்டும் என்று இயக்குநர்களுக்கு ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தி உள்ளது. நல்லப்படத்துக்கு மக்கள் திரையரங்குக்கு வருவார்கள் என்பதை இது காட்டுகிறது.
நடிகர்களுக்கு ஒரு தரப்பினர் மட்டுமே ரசிகர்களாக இருப்பார்கள்.ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மட்டுமே அனைத்து தரப்பினரும் ரசிகர்களாக உள்ளார்கள். தலைவர் படம் என்றால் சொல்லத் தேவையில்லை. அவர் படம் எப்போது வந்தாலும் முதல் நாளாக பார்ப்பேன். தற்போது வெளியாக உள்ள படத்தை முதல் காட்சியிலேயே குடும்பத்துடன் பார்ப்பேன்.
சாதியை மையமாக வைத்து படம் எடுப்பதாக கேட்கிறீர்கள். அவரவருக்கு தெரிந்த விஷயத்தை படம் எடுப்பார்கள். ஒரு ஊர் என வந்தாலே அதில் பல விஷயம் வரும். எந்த ஒரு இயக்குநரும் சாதிகளை முன்வைத்து படங்களை இயக்குவதில்லை. அனைத்து சமூக மக்களும் வேலைசெய்தால்தான் திரைப்படம் எடுக்க முடியும். அனைவரும் பார்த்தால்தான் வெற்றி பெற முடியும். சினிமா என்பது சாதி, மதம், மொழி, இதற்கெல்லாம் அப்பாற்பட்டது” என்றார்.
அத்துடன் ஹரி புதுச்சேரி நகரப்பகுதியில் நேரு வீதி, பாரதி வீதி, குபேர் அங்காடி உள்ளிட்ட பல பகுதிகளுக்கு சென்று அங்கு பூ, பழம் மற்றும் காய்கறி விற்போரிடம் தேர்தல் பிரசாரம் போல் தனது படம் வெளியாவதை பற்றி எடுத்துரைத்தார்.
+ There are no comments
Add yours