திருவனந்தபுரம்: ““உங்கள் அனைவருக்கும் என்னை பல ஆண்டுகளாக தெரியும். இல்லையா? பிறகு எப்படி ஒரே நாளில் நான் எப்படி உங்களுக்கு அந்நியமாக மாறினேன். நான் எங்கும் ஓடிப்போகவில்லை. மலையாள திரையுலகை அழித்துவிடாதீர்கள். குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க வேண்டும், அதே சமயம் நம் திரையுலகம் பாதுகாக்கப்பட வேண்டும்.” என நடிகரும், ‘அம்மா’ அமைப்பின் முன்னாள் தலைவருமான மோகன்லால் தெரிவித்துள்ளார்.
மலையாள திரையுலகில் நிகழும் பாலியல் சுரண்டல்கள் குறித்த ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான பின், நடிகர் சங்கமான ‘அம்மா’ சங்கத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து நடிகர் மோகன்லால் ராஜினாமா செய்தார். அவருடன் செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரும் ஒட்டுமொத்தமாக ராஜினிமா செய்தனர். இது குறித்து பல விமர்சனங்கள் எழுந்தது.
இந்நிலையில் இன்று (ஆக.31) திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ’கேரளா கிரிக்கெட் லீக்’ நிகழ்வில் கலந்துகொண்டு செய்தியாளர்களிடம் பேசிய மோகன்லால், “நான் எங்கும் ஓடிப்போகவில்லை. எனது தனிப்பட்ட பிரச்சினை காரணமாக நான் கேரளாவில் இல்லை. என் மனைவியின் அறுவை சிகிச்சை காரணமாக, நான் மருத்துவமனையில் இருக்க வேண்டியிருந்தது. நாங்கள் ஹேமா கமிட்டி அறிக்கையை வரவேற்கிறோம். இந்த அறிக்கையை அரசு வெளியிட்டது சரியான முடிவு.
‘அம்மா’ சங்கம் என்பது ஒரு தொழிற்சங்கம் அல்ல. அது ஒரு குடும்பம் போன்றது. சங்கத்துக்கு எதிரான கருத்துகள் வருத்தமளிக்கிறது. ‘அம்மா’ அமைப்பே எல்லா கேள்விகளுக்கும் பதிலளித்துக்கொண்டிருக்க முடியாது. இந்த கேள்விகள் அனைவரிடமும் கேட்கப்பட வேண்டியவை. சங்கத்தின் உறுப்பினர்களுக்காக நாங்கள் பல நற்பணிகளை செய்துள்ளோம். மற்ற திரைத்துறையை ஒப்பிடும்போது நம் திரைத்துறை சிறப்பாகவே செயல்படுகிறது. குற்றவாளிகள் நிச்சயம் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொள்ள வேண்டும். எல்லா வகையிலும் நாங்கள் விசாரணைக்கு ஒத்துழைப்போம்.
மற்ற திரையுலகிலும் ஹேமா கமிட்டி போன்ற ஒரு குழு அமைக்கப்பட வேண்டும். இந்த முக்கியமான நிகழ்வு மலையாள திரையுலகிலிருந்து தொடங்கியதாக இருக்கட்டும். மலையாள திரையுலகை நம்பி பல குடும்பங்கள் உள்ளதால் ஊடகத்தினர் கவனமாக செயல்பட வேண்டுகிறேன். இந்த சர்ச்சையின் விளைவாக முழு திரையுலகத்துக்கும் பாதிப்பு ஏற்படாத வண்ணம், சமமான அணுகுமுறையை மேற்கொள்ள ஊடகத்தினரை கேட்டுக் கொள்கிறேன். கலைஞர்களாகிய நாங்கள் பல ஆண்டுகள் கஷ்டப்பட்டு உருவாக்கிய திரையுலகை அழிக்க முயற்சிக்காதீர்கள். திரையுலகில் இருக்கும் பிரச்சினைகளை களைந்து முறையான தீர்வு காண நாம் அனைவரும் ஒருங்கிணைவோம்” என்றார்.
மேலும், “உங்கள் அனைவருக்கும் என்னை பல ஆண்டுகளாக தெரியும். இல்லையா? பிறகு எப்படி ஒரே நாளில் நான் எப்படி உங்களுக்கு அந்நியமாக மாறினேன். நான் ஒரு நடிகராக, தயாரிப்பாளராக, இயக்குநராக என்னுடைய படங்களில் நிகழ்ந்த பிரச்சினைகளை ஹேமா கமிட்டியிடம் தெரிவித்துவிட்டேன். அதேசமயம் மொத்த திரையுலகம் குறித்தும் என்னால் கருத்து சொல்ல முடியாது. அனைத்து குற்றச்சாட்டுகளும் தேவையில்லாமல் எங்களை நோக்கி வருகின்றன. அதை நிறுத்திவிட்டு மலையாள சினிமாவை காப்பாற்றுவோம்.‘அம்மா’ அமைப்பு இதைச் செய்யவில்லை, அதைச் செய்யவில்லை என்று சொல்பவர்கள் தாராளமாக வந்து போட்டியிட்டு வெற்றி பெற்று சங்கத்தை வழிநடத்தட்டும்.” என்றார்.
அம்மா சங்க கலைப்பு குறித்து கேட்டதற்கு, “இந்த சம்பவத்துக்கு ‘அம்மா’ சங்கம் மட்டும் பதில் சொல்ல முடியாது. ஒட்டுமொத்த திரையுலகமுமே பதிலளிக்க வேண்டும். இந்த அறிக்கை ஒரு பிரச்சினையை மட்டும் அல்ல பலவற்றை எடுத்துரைத்துள்ளது. அவை என்னவென்று என்னை விட உங்களுக்கு நன்றாகத் தெரியும்” என்றார்.
+ There are no comments
Add yours