சென்னை: ஒவ்வொரு முறை தமிழகத்திற்கு வருகைதரும் போதெல்லாம் தமிழ் மக்களின் அன்பை வியந்து பார்க்கிறேன். தமிழ் சினிமாவை நான் தொடர்ந்து பார்த்து ரசித்து வருகிறேன். தமிழ் ரசிகர்கள் என் மீது காட்டும் அன்பு என்னை பிரமிக்க வைக்கும் என்று ‘சூர்யாவின் சனிக்கிழமை’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் நானி தெரிவித்துள்ளார்.
நானி நடிப்பில் தெலுங்கில் வெளியான ‘அந்தே சுந்தரானிகி’ படத்தின் இயக்குநர் விவேக் ஆத்ரேயா இயக்கியுள்ள படம் ‘சரிபோதா சனிவாரம்’ (Saripodhaa Sanivaaram) என பெயரிடப்பட்டுள்ளது. தமிழில் ‘சூர்யாவின் சனிக்கிழமை’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இதில் நானி, எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா மோகன் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆகஸ்ட் 29-ம் தேதி ரிலீஸாக உள்ள இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று (ஆக.17) சென்னையில் நடைபெற்றது.
இதில் நடிகர் நானி பேசியதாவது: “ஒவ்வொரு முறை தமிழகத்திற்கு வருகைதரும் போதெல்லாம் தமிழ் மக்களின் அன்பை வியந்து பார்க்கிறேன். தமிழ் சினிமாவை நான் தொடர்ந்து பார்த்து ரசித்து வருகிறேன். இங்கு மணிரத்னம், ஷங்கர், பாரதிராஜா சார் என ஏராளமான ஆளுமைகள் இருக்கிறார்கள்.
நான் நடித்த படங்களை பார்த்துவிட்டு வெளியே வந்து படத்தைப் பற்றி பேசும் தமிழ் மக்களின் கருத்துக்களை நான் யூடியூபில் பார்த்து தெரிந்து கொள்வேன். குறிப்பாக படம் பார்த்துவிட்டு வெளியே வரும் ரசிகர்களின் ரியாக்சனை கவனிப்பேன்.
சென்னை விமான நிலையத்துக்கு வரும் போதெல்லாம் அங்கு ரசிகர்கள் என் மீது காட்டும் அன்பு என்னை பிரமிக்க வைக்கும். என்னுடன் செல்ஃபி எடுத்துக் கொள்வதாகட்டும். நலம் விசாரிப்பதாகட்டும். அவர்கள் காட்டும் அன்பு சிறப்பானது. தொடர்ந்து என் மீது பாசத்துடன் இருக்கும் தமிழ் ரசிகர்களுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
‘சூர்யாவின் சனிக்கிழமை’ எனக்கு ஸ்பெஷலான திரைப்படம். பொதுவாக இந்த கால ரசிகர்களுக்கு ஆக்சன் படம் என்றால் பிரம்மாண்டமானதாகவும் தொடக்கம் முதல் இறுதி வரை பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கவேண்டும். அந்த பாணியில் ஏராளமாக படங்கள் வெளியாகி இருக்கிறது.
ஆனால் தமிழ் படங்களில் இருப்பது போல் எளிமையான ஆக்சன் படங்களை இந்த கால ரசிகர்களுக்கு வழங்க வேண்டும் என விரும்பினோம். இயக்குநர் விவேக் ஆத்ரேயா தமிழ் மக்களின் உணர்வு, தெலுங்கு மக்களின் உணர்வு என பாகுபாடு பார்க்காமல் பொதுவாக அனைத்து தரப்பு மக்களின் உணர்வைப் பிரதிபலிக்கும் வகையில் இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார். அவருடைய திரை மொழி தனித்துவமானது. அனைவருக்குமானது. இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் என்பது என்னுடைய நம்பிக்கை.
இந்தப் படத்தை பொருத்தவரை நான் செகண்ட் ஹீரோ தான். எஸ்.ஜே.சூர்யா தான் முதல் ஹீரோ. இந்தப் படத்தின் டைட்டில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு தான் பொருத்தமானது. என்னைப் பொறுத்தவரை இது எஸ்.ஜே.சூர்யாவின் சாட்டர்டே. அவர் திரையில் தோன்றும் போது வழங்கும் உத்வேகம் அலாதியானது. படப்பிடிப்பு தளத்திலும் அவருடைய உற்சாகம் அனைவருக்கும் பரவும்.
அபிராமி, ‘விருமாண்டி’ படத்தில் நடித்த தருணத்திலிருந்து நான் அவருடைய ரசிகன். அந்தப் படத்தில் அவருடைய அற்புதமான நடிப்பை பார்த்து வியந்து இருக்கிறேன். இந்தப் படத்தில் சிங்கிள் ஷாட்டில் படமாக்கப்பட்ட முக்கியமான காட்சியில் அவருடைய நடிப்பு பிரமாதமாக இருந்தது. இதை ரசிகர்களும் திரையில் பார்த்து பாராட்டு தெரிவிப்பார்கள்” இவ்வாறு நானி பேசினார்.
+ There are no comments
Add yours