தமிழ் திரையுலகில் கட்டப் பஞ்சாயத்து நடக்கிறது என்று நடிகர் விஷால் நேற்று முன் தினம் பரபரப்பு ஆடியோ ஒன்றை வெளியிட்டார். இதுகுறித்து, இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாரிடம் கேள்வி எழுப்பியபோது, அது உண்மைதான் என்று கூறியுள்ளார்.
ஹரி- விஷால் இயக்கத்தில் ‘ரத்னம்’ படம் நேற்று வெளியானது. படத்திற்கு திருச்சி, தஞ்சாவூர் பகுதிகளில் உள்ள சரியான திரையரங்குகளை தனது பட வெளியீட்டிற்கு கொடுக்கவில்லை என நடிகர் விஷால் புகார் எழுப்பி பரபரப்பைக் கிளப்பினார். தமிழ் திரையுலகில் கட்டப்பஞ்சாயத்து நடப்பதாகவும் தயாரிப்பாளர்கள் சங்கம் எதற்கு இருக்கிறது என்றும் கேள்வி எழுப்பினார்.
நடிகர் சங்க பொதுச்செயலாளராக இருந்தும் அவரது இந்தப் பிரச்சினைக்கு சங்கமோ அல்லது சக நடிகர்களோ ஆதரவுக் குரல் எழுப்பாதது ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. மேலும், தயாரிப்பாளர்கள் சங்கத்தை கேள்வி கேட்கும் விஷால் நடிகர் சங்கம் சார்ந்த பல பிரச்சினைகளை சரி செய்ய முன் வராதது ஏன் என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில், சினிமாவில் கட்டப்பஞ்சாயத்து நடப்பது உண்மையா என இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. நேற்று உணவகம் ஒன்றின் திறப்பு விழாவில் கலந்து கொண்டவர், “சினிமாத் துறையில் கட்டப் பஞ்சாயத்து நடப்பது உண்மைதான்” என்றார்.
”இந்த விஷயத்தை நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆனால், என்னுடைய படங்களுக்கு அப்படி நடந்ததில்லை. நானும் அப்படி நடந்து கொள்ளவில்லை” என்று கூறினார். மேலும், சிறிய பட்ஜெட் படங்கள் இந்த காலத்தில் ஜெயிப்பது முக்கியம் எனவும் வலியுறுத்தினார்.
+ There are no comments
Add yours