தேனி மாவட்டம் பண்ணைபுரத்தைச் சேர்ந்த இளையராஜா, அந்த காலத்தில் மதுரையில் ரயில் ஏறி, எப்படி நேரடியாக சென்னை சென்ட்ரலுக்கு சென்றிருக்க முடியும் என்று கேள்வி எழுப்பி நடிகர் தனுஷையும், இயக்குனர் அருண் மாதேஸ்வரனையும் நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள்.
நடிகர் தனுஷ் இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். ‘இளையராஜா’ என்றே தலைப்பிடப்பட்டுள்ள, இந்தப் படத்தை கேப்டன் மில்லர் படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். கனெக்ட் மீடியா, பி.கே பிரைம் புரொடக்ஷன், மெர்குரி மூவீஸ் நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்க உள்ளன. நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னட மொழிகளில் வெளியாகிறது. இளையராஜா பயோபிக்கிற்கு கமல் திரைக்கதை எழுத உள்ளதாக கூறப்படுகிறது.
தேனி மாவட்டம் பண்ணைப்புரத்தைச் சேர்ந்த இளையராஜா தனது அண்ணன் பாவலரின் பாட்டுக்குழுவில் இணைந்து இடதுசாரிகளின் கூட்டங்களில் சிறுவயதில் பாடி வந்தார். பின்னர் சினிமாவில் பாட ஆசைப்பட்ட இளையராஜா, எப்படி சென்னை வந்து, வாய்ப்பு தேடி வெற்றிகரமான இசையமைப்பாளராக உருவானார் என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாக உள்ளது.
1000 படங்களுக்கு மேல் இசையமைத்த இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் படத்தை எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். இந்தப் படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ள படத்தின் போஸ்டரைப் பார்த்த ரசிகர்கள் இயக்குனர் அருண்மாதேஸ்வரனையும், தனுஷையும் விமர்சித்து வருகின்றனர்.
போஸ்டரில் இளையராஜா சென்னை வந்தப்போது நேரடியாக சென்னை சென்ட்ரலில் வந்திறங்கியது போல் உள்ளது. ஆனால் அந்த காலத்தில் மதுரையில் இருந்து எப்படி ரயிலில் சென்ட்ரல் வந்திருக்க முடியும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அந்த காலத்தில் தேனி மாவட்டம் தனியாக இல்லாமல், மதுரை மாவட்டத்தின் ஒரு அங்கமாகவே இருந்தது. 1997 ஆம் ஆண்டு தான் மதுரை மாவட்டத்தில் இருந்து தேனி மாவட்டம் தனியாகப் பிரிந்தது. அந்த காலத்தில் இப்போது உள்ளது போல் பேருந்து வசதி இல்லை. எனவே தேனியைச் சேர்ந்தவர்கள் மதுரை வந்து ரயில் அல்லது பேருந்தில் ஏறி பிற இடங்களுக்குச் செல்ல வேண்டும். அப்படி இருக்க தேனி பண்ணைபுரத்தில் இருந்து மதுரைக்கு சென்று அங்கிருந்து ரயிலில் பயணித்து ஆர்மோனிய பெட்டியுடன் இளையராஜா எப்படி சென்னை சென்ட்ரலில் வந்து இறங்கி இருக்க முடியும் என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இப்போது தான் போடிநாயக்கனூரில் இருந்து மதுரை வழியாக சென்ட்ரலுக்கு ரயில் இருப்பதாகவும், அப்போது எல்லாம் மதுரையில் இருந்து சென்னை சென்ட்ரல் வந்திருக்க முடியாது என்பதும் நெட்டிசன்களின் விமர்சனமாக உள்ளது. இது தொடர்பாக புளுசட்டை மாறனும் தனது எக்ஸ் பக்கத்தில் விமர்சன கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.
+ There are no comments
Add yours