கமல்ஹாசன் – ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள ‘இந்தியன் 2’ திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இப்படத்தில் மூலம் வெளிப்படும் சமூகப் பார்வை எழுப்பும் கேள்விகள் மிக முக்கியமானது.
இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் கடைசியாக கடந்த 2018-ம் ஆண்டு ‘2.0’ திரைப்படம் வெளியானது. கிட்டத்தட்ட 6 வருடங்களுக்குப் பின் ‘இந்தியன் 2’ வெளியாகியுள்ளது. தனது கடைசி 2 படங்களில் எதிர்கால தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து முன்னோக்கிய சிந்தனையை வெளிப்படுத்தும் விதமாக ரோபோடிக் பற்றி பேசியிருந்தார் ஷங்கர். தொழில்நுட்ப ரீதியாக இவ்வளவு முன்னோக்கி சிந்தி்க்கும் அவர் 2024-ம் ஆண்டிலும் சமூகம் குறித்த சில பிற்போக்குத்தனமான சிந்தனைகளைக் கொண்டிருப்பது அவரது ‘அப்டேட்’ ஆகாத தன்மையை மட்டுமல்லாமல் வன்மத்தையும் வெளிப்படுத்துகிறது.
‘இந்தியன் 2’-வில் என்ன பிரச்சினை? – மொத்தப் படமுமே பிரச்சினை என்றாலும், ஷங்கரின் முந்தையப் படங்களில் இருக்கும் எளிய, ஒடுக்கப்பட்ட மக்கள், திருநங்கைகள் மீதான அவரது மோசமான பார்வை இன்னும் மாறவேயில்லை என்பதை இப்படம் உறுதி செய்கிறது. படத்தில் ஆரம்பத்தில் தொழிலதிபர் ஒருவரை தனது வர்மக் கலையால் கொல்கிறார் கமல். கொல்லப்படுவதற்கு முன், வர்மத்தால் பாதிக்கப்படும் தொழிலதிபரின் உடல்மொழி ஒருவித நளினத்துடன் மாற்றம் பெறுகிறது. திருநங்கைகளை குறிப்பிடும் வகையில் கேலியாக சித்தரிக்கப்பட்ட அந்தக் காட்சி அபத்தமானது.
அடுத்தடுத்து தொழிலதிபர்கள் கொல்லப்படும்போது, அவர்கள் மிருகங்கள் போன்ற உடல்மொழியால் பாதிப்புக்கு ஆளாகி துன்புறுத்தப்பட்டு பின்னர் கொல்லப்படுகினறனர். அப்படியென்றால் ஆண், பெண்ணைப் போன்ற நளினத்துடன் மாறுவது மிகப் பெரிய தண்டனையா? அவமானமா? இதைப் பார்க்கும் மூன்றாம் பாலினத்தவர்களின் மனநிலை குறித்த இயக்குநர் ஷங்கரின் பார்வை என்ன?
சமூக அங்கீகாரம் மறுக்கப்பட்டு முன்னேற்றம் காண போராடி வரும் மூன்றாம் பாலினத்தவர் இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் ஷங்கர் மட்டுப்படுத்திக் கொண்டேயிருப்பார்? அவரது இயக்கத்தில் வெளியான ‘ஐ’ படத்திலும் திருநங்கைகள் குறித்த இதே மனநிலையில் தான் ஒரு கதாபாத்திரத்தையும் காட்சியையும் அமைத்திருந்தார். மட்டுமின்றி நேரடியாக திருநங்கைகளை தாக்கும் வசனங்களையும் இடம்பெறச் செய்திருந்தார்.
இத்தனைக்கும் அப்படம் விழிப்புணர்வு இல்லாத காலக்கட்டத்தில் வெளியானதல்ல. சமூக வலைதளங்கள் மக்களிடையே பரவலாக பயன்பாட்டுக்கு வந்த காலகட்டத்தில் வெளியானதுதான். ஊழலில் இருந்து மக்கள் விடுபடுவது இருக்கட்டும், முதலில் இப்படியான மனநிலையில் இருந்து இயக்குநர் ஷங்கர் விடுபட வேண்டும்.
அதேபோல, மற்றொரு காட்சியில் கமல் ஆன்லைனில் ஊழல் தொடர்பாக நீண்….ட வகுப்பெடுத்து கொண்டிருப்பார். அப்போது கலரிங் அடித்த தலைமுடியுடன் வட சென்னையைச் சேர்ந்த மக்களின் மொழி மற்றும் உடல் பாவனைகளுடன் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் இளைஞர்கள் சிலர், கமலுக்கு எதிராக சமூக வலைதளத்தில் கமென்ட் இடுவார்.
அதற்கு பதிலளிக்கும் கமல், ‘கழிப்பறை சுவர்ல எழுதிட்டு இருந்தவங்கல்லாம் ஃபேஸ்புக் சுவர்ல எழுத ஆரம்பிச்சிட்டீங்களா?’ என கேட்பார். இதன் அர்த்தம் என்ன? எளிய மக்களின் சமூக வலைதள பயன்பாடு உங்களை ஏன் அசசுறுத்துகிறது? அதே எளிய மக்கள் தைரியமாக சமூக ஊடகங்களில் பேசுவதால்தான் பல சமூக பிரச்சினைகள் வெளியே தெரிகின்றன. ஆன்லைன் அப்யூசர்களாக அவர்களை மட்டும் குறிப்பிட்டு தனித்து காட்சிப்படுத்தி புளங்காகிதம் அடைவது ஏன்? ‘இவங்கள்ளாம் வந்துட்டாங்களே’ என்ற மொழிநடையின் மாற்று முகம்தானே மேற்கண்ட வசனம்?
ஒடுக்கப்பட்ட மக்களின் மீதான ஷங்கரின் வன்மம் புதிதல்ல. ‘முதல்வன்’ படத்தில் ஒரு காட்சியில் கல்லூரி மாணவி ஒருவர் ஒருநாள் முதல்வரான அர்ஜுனிடம் ‘குப்பத்து பொறுக்கிப் பசங்க’ என்று சொல்வதைப் போல ஒரு வசனம் வைத்திருப்பார். குடிசைவாழ் மக்களை பொதுமைப்படுத்தி காழ்ப்புடன் வைக்கப்பட்ட வசனமாகவே இதைப் பார்க்கமுடிகிறது.
பார்க்கில் குடித்து விட்டு துங்குபவர், ரோட்டில் குப்பை போடுபவர், எச்சில் துப்புபவர் இவர்களெல்லாம் தான் ஷங்கரின் படங்களில் ஆகப் பெரும் தேச துரோகிகள். அவர்களை குற்றவாளிக் கூண்டில் ஏற்றி மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்பது போன்ற ஆபத்தான கருத்தியலை ‘அந்நியன்’ போன்ற படங்கள் பேசின.
இந்தியன் 2-விலும் படத்தின் ஆரம்ப காட்சியிலேயே, குப்பைகளை ஏற்றிச் செல்லும் தூய்மைப் பணியாளரைப் பார்த்து ஜெகன் நக்கலான தொனியுடன், ‘அய்யா துப்புரவு தொழிலாளரே, காசு வாங்குறீங்கள்ல’ என்று கேட்பார். இன்னும் ஒரு படி மேலே போய், ஒரு காட்சியில் இலவச திட்டங்களால் பயனடையும் மக்களையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கும் வகையில் வசனம் வைத்திருக்கிறார். மேடையிலும், பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகளிலும் சமூக நீதியை பேசும் கமல், இந்தக் காட்சிகளையும், வசனங்களையும் அனுமதித்ததுதான் ஆச்சர்யம்.
சென்னையின் பிரதான இடத்தில் இருக்கும் உயர் வகுப்பைச் சேர்நத பாபி சிம்ஹா, சிபிஐ அதிகாரியாகவும், கொத்தவால்சாவடி பகுதியில் இருக்கும் அனைவரும் பாடி பில்டர்கள், வர்மத்தை கூட சரியாக உச்சரிக்கத் தெரியாத ரவுடிகளாகவும் சித்தரிக்கும் அதீத புரிதலும், மறைமுக ஒடுக்குதலும் போகிற போக்கில் ஏற்றும் விஷ ஊசிகள். மார்க்கெட்டில் மீன் விற்கும் ஒரு பெண் கூட மீனின் வயிற்றில் கோலி குண்டுகளை நிரப்பி வாடிக்கையாளர்களை ஏமாற்றுகிறார். படம் பார்ப்பவர்களை முட்டாளாக நினைத்தால் மட்டுமே இப்படியான ஒரு காட்சியை வைப்பது சாத்தியம்.
மேலும், கிட்டத்தட்ட படத்தில் வரும் அரசு ஊழியர்கள் அனைவருமே லஞ்சம் வாங்குபவர்கள் தான்; மருந்துக்கு கூட ஒரே ஒரு ஊழியர் கூட நல்லவராக காட்டப்படவில்லை. பொதுமக்களோ, இயக்குநர்களோ, அரசியல்வாதிகளோ அனைவருமே ஒருகாலத்தில் புரிதல் இல்லாமல் தவறான கருத்துகளை வெளிப்படுத்தியிருக்கலாம். ஆனால் காலப்போக்கில் வாசிப்பு, பரந்த பார்வை ஆகியவற்றின் மூலம் விழிப்புணர்வு ஏற்பட்ட பின் அவற்றை மாற்றிக் கொள்வதே இயல்பு. ஷங்கரின் இனி வரக்கூடிய படங்களிலாவது ஒடுக்கப்பட்ட, எளிய மக்களின் மீதான அவரது பார்வை மாறும் என்று நம்பலாம்.
+ There are no comments
Add yours