ஐ.நா.சபையில் இருந்து விலகி, சீனாவும் ரஷ்யாவும் 2028-ல் ‘ரிபப்ளிக்’ என்ற கூட்டமைப்பை உருவாக்குகிறது. இதில் இணையாத நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இருக்கிறது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கும் ஜி.என்.ஆர் (நாசர்), ஊழல்வாதியான அவரது மைத்துனர் நடராஜ் (நட்டி நடராஜ்) ஆட்டி வைப்பதற்கேற்ப ஆட்சி நடத்துகிறார். ஜி.என்.ஆரின் திடீர் உடல்நலக் குறைவால், அவரதுஇடத்தில் மகள் கீர்த்தனாவை (அனகா) தனக்கேற்ற பொம்மையாகப் பொருத்தி வைக்க, அவரைக் கல்வி அமைச்சர் ஆக்குகிறார் நடராஜ்.ஆனால், தமிழரசனின் (ஹிப் ஹாப் ஆதி) வழிகாட்டுதலால், சுயமாகச் செயல்படத் தொடங்குகிறார் கீர்த்தனா. அவரை பின்னாலிருந்து இயக்கும்தமிழரசனைத் தீவிரவாதி எனப் புனைந்து என்கவுன்ட்டர் செய்ய ஏற்பாடு செய்கிறார் நடராஜ்.அந்த நேரத்தில் மூன்றாம் உலகப் போர் உருவாகிறது. ரிபப்ளிக் படைகளின் தாக்குதலுக்கு சென்னை இலக்காக, இதில் தமிழ்நாடு, இந்தியாவின் நிலை என்னவானது? நடராஜன், தமிழரசன் என்னவானார்கள்? உலகப் போர் முடிவுக்கு வந்ததா இல்லையா என்பது கதை.
‘எதிர்கால ஃபேன்டஸி’ என்கிற கதைக் களத்துக்குள் துணிந்து சாதித்திருக்கிறார் ஹிப் ஹாப் ஆதி. அண்ணாசாலையின் எல்.ஐ.சி., சென்ட்ரல் ரயில் நிலையம், எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம் போன்ற சென்னையின் முக்கிய அடையாளக் கட்டிடங்கள் மீது போர் விமானங்கள், குண்டு வீசித் தாக்கும் தொடக்கக் காட்சியே இது புதிய தலைமுறைப் போர் படம் என்பதைச் சொல்லிவிடுகிறது. “இப்ப சொல்லப் போறது என்னோடக் கதைதான். ஆனால் அதுல ஹீரோ நான் இல்ல!” என, ‘கிங்மேக்கர்’ நடராஜ் உயிர் பிழைக்க ஓடியபடி கதைசொல்லத் தொடங்கும்போது திரைக்கதையில் பற்றும் தீ, கிளைமாக்ஸ் வரை எரிந்துகொண்டேயிருக்கிறது.
ரிபப்ளிக் ஆக்கிரமிப்பிலிருந்து விடுபடப் போராடும் ஒரு குழுவுக்குத் தலைமையேற்று, அதில் உடனிருக்கும் கதாபாத்திரங்களுக்கு பங்களிப்பைப் பகிர்ந்தளிப்பதே உண்மையான ஹீரோயிசம் எனக் காட்டியிருக்கும் ஹிப் ஹாப் ஆதி, திரைக்கதை எழுத்தாளராக ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார்.
குறிப்பாக நடராஜ், அவரது நண்பராக வரும் சென்னைக் காவல் ஆணையர், தமிழ்த்தேசிய அரசியல் செய்யும் புலிப்பாண்டி, முதல்வர் மகள் கீர்த்தனா, என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் தாஸ், மாஸ் ஹீரோ ரிஷிகாந்த் என ஒவ்வொரு கதாபாத்திரமும் எதிர்பாராத போரால், மற்றொரு பரிமாணத்துக்கு எப்படி மாறிப் போகிறார்கள் என்பதைச் சித்தரித்த விதம் அபாரம்.
போரின் பதற்றமும் தனது அதிகாரத்தின் சரிவு உருவாக்கிய வெறுப்பும் நடராஜின் குரலில் ஒட்டிக்கொண்டிருப்பது கதையைக் கூர்ந்து கவனிக்க வைக்கிறது. தேர்ந்த நடிப்பால் தனது முந்தைய கதாபாத்திரங்களை மறக்கடித்துவிடுகிறார் நட்டி.
ஆதிக்கும் அனகாவுக்குமான காதல் உருவாகும் விதம், வளரும் விதம் ஆகியவற்றை சித்தரித்திருப்பதுடன், இருவருக்குமான இணைவை நடிப்பின் மூலம் கச்சிதமாகக் கொண்டுவந்திருக்கிறார்கள்.
கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, கலை இயக்கம், வி.எஃப்.எக்ஸ், பாடல்கள், பின்னணி இசை, இயக்கம் ஆகியவற்றில் இருக்கும் தரம் புதிய எல்லைக்கு உயர்ந்திருப்பதுடன் விறுவிறுப்பானதிரை அனுபவத்தை வழங்கி மனதை ஆக்கிரமிக்கிறது இந்தப்படம்.
+ There are no comments
Add yours