நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் 4 மாதங்களில் ‘அனிமல்’ திரைப்படம் பெற்ற பார்வைகளை விட அதிக பார்வைகளை ஒரே மாதத்தில் பெற்று அசத்தியுள்ளது ‘லாபத்தா லேடீஸ்’ திரைப்படம். இதனை ரசிகர்கள் கொண்டாடுவது ஏன் என்பது குறித்தும் பார்ப்போம்.
சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான திரைப்படம் ‘அனிமல்’. இந்தப் படம் ஆணாதிக்க சிந்தனைக்கு வலுவூட்டும் வகையில் உள்ளதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டியிருந்தனர். அந்த வகையில் ஆமீர்கானின் முன்னாள் மனைவியும், இயக்குநருமான கிரண் ராவ், “சந்தீப் ரெட்டி வாங்காவின் படங்கள் பெண் வெறுப்பை இயல்பாக்கி வருகின்றன” என குற்றம் சாட்டியிருந்தார்.
இதற்கு பதிலளித்திருந்த சந்தீப் ரெட்டி வாங்கா, “அவருக்கு ஒரு பெண்ணை துரத்தி துரத்தி துன்புறுத்துவதற்கும் வெறுமென அணுகுவதற்கும் வித்தியாசம் தெரியவில்லை என நினைக்கிறேன்” என்றார்.
இந்நிலையில், மார்ச் 1-ம் தேதி கிரண் ராவ் இயக்கத்தில் ‘லாபத்தா லேடீஸ்’ திரைப்படம் வெளியானது. சமூகத்தின் பிற்போக்குத்தனங்களையும், ஆணாதிக்க மனநிலையையும் எள்ளி நகையாடிய இந்தப் படம் ரசிகர்களால் வரவேற்கப்பட்டது. திரையரங்குக்குப் பின் இப்படம் கடந்த ஏப்ரல் 26-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியானது. படம் வெளியான ஒருமாதத்தில் 13.8 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
அதேசமயம் கடந்த ஜனவரி 26-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியானது ‘அனிமல்’. இந்தப் படம் 4 மாதங்களைச் சேர்த்து 13.6 மில்லியன் பார்வைகளை மட்டுமே பெற்றுள்ளது. இதனை ஒப்பிட்டு ரசிகர்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். ஆரோக்கியமான திரைப்படங்களுக்கு எப்போதும் மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்துகொண்டு தான் இருக்கும் என தெரிவித்துள்ளனர்.
ஆனால், 100 கோடி பட்ஜெட்டில் உருவான சந்தீப் ரெட்டி வாங்காவின், ‘அனிமல்’ திரைப்படம் திரையரங்குகளில் ரூ.900 கோடி வசூலை ஈட்டியதையும் கவனிக்க வேண்டியுள்ளது. ‘லாபத்தா லேடீஸ்’ 5 கோடியில் உருவாக்கப்பட்டு மொத்தம் ரூ.20 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours