‘லியோ’ வெளியான சமயத்தில் நடந்த சர்ச்சை குறித்து ரத்னகுமார் சூசகமாக தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், சஞ்சய் தத், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘லியோ’. வசூல் ரீதியில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தினை லலித் குமார் தயாரித்திருந்தார். இப்படம் வெளியாகி நேற்றுடன் (அக்டோபர் 19) ஓராண்டு நிறைவடைந்தது.
இதனை முன்னிட்டு பிரத்யேக வீடியோ பதிவு ஒன்றினை படக்குழு வெளியிட்டது. மேலும் லோகேஷ் கனகராஜ் நெகிழ்ச்சிப் பதிவு ஒன்றிணை வெளியிட்டு இருந்தார். அதே வேளையில் ‘லியோ’ படத்தில் இணை இயக்குநராக பணிபுரிந்த ரத்னகுமாரும் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “படத்தின் ரிலீஸ் நேரத்தில் அதை சுற்றி வெளியான தகவல்கள் இன்னும் என் காதுகளில் ரீங்காரம் இடுகின்றன. ஒவ்வொரு கமாவும், புள்ளியும் ஒரு குறியீட்டு வார்த்தையாக எடுத்துக் கொள்ளப்பட்டது. அதை சுற்றி நடந்த இம்சையை மிகவும் ரசித்தேன். அது வாழ்வில் ஒருமுறை மட்டுமே கிடைக்கக் கூடிய உணர்வு. ஆம், நான் உட்பட பல ரசிகர்களின் இதயத்துக்கு நெருக்கமான படம். மீண்டும் பார்த்திபனை கொண்டு வாருங்கள் லோகேஷ்” என்று தெரிவித்துள்ளார் ரத்னகுமார்.
இந்தப் பதிவின் பின்னணி என்னவென்றால் ரஜினி ரசிகர்களுக்கும் – ரத்னகுமாருக்கும் இடையே நடந்த சர்ச்சை தான். ‘ஜெயிலர்’ இசை வெளியீட்டு விழாவில் காக்கா – கழுகு இரண்டையும் வைத்து கதையொன்றை தனது பேச்சில் குறிப்பிட்டார் ரஜினி. அதனைத் தொடர்ந்து ‘லியோ’ படத்தின் வெற்றி சந்திப்பில் “எவ்வளவு உயர்த்தில் இருந்தாலும் பசிக்கும்போது கீழே வந்து தான் ஆகணும்” என்று ரத்னகுமார் தனது பேச்சில் குறிப்பிட்டார்.
இந்த இரண்டையும் வைத்து ரஜினி ரசிகர்கள் ரத்னகுமாரை கடுமையாக சாடினார்கள். ஆனால் எதற்குமே ரத்னகுமார் பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours