‘தேவரா’ படத்தின் வசூல் 2-வது நாளில் பெருமளவு குறைந்திருப்பதால் படக்குழு அதிர்ச்சியில் இருக்கிறது. கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடித்து வெளியாகியுள்ள படம் ‘தேவரா’. செப்டம்பர் 27ம் தேதி வெளியான இந்தப் படம் முதல் நாளில் 172 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
இந்த முதல் நாள் வசூல் தெலுங்கு திரையுலகில் பல்வேறு சாதனைகளை உடைத்திருக்கிறது. இந்நிலையில், ‘தேவரா’ படத்தின் 2-ம் நாள் வசூல் பெருமளவு குறைந்திருக்கிறது. இந்தியளவில் சுமார் 50%, வெளிநாட்டில் சுமார் 30% என வர்த்தக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் 2-வது நாள் வசூல் சுமார் 45 கோடி ரூபாய் அளவுக்கு இருக்கும் எனவும் கணித்திருக்கிறார்கள். ஆனால், முதல் நாள் வசூல் 97 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் 2-வது நாள் என்பது வார விடுமுறை நாட்களாகும். அப்போதுதான் வசூல் கூடும். ஆனால், எதிர்பாராத விதமாக 30% குறைந்திருக்கிறது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். வரும் நாட்களில் தசரா விடுமுறை தினங்கள் வருவதால் கண்டிப்பாக திரையரங்குகளில் ஓடும் எனவும் எதிர்பார்க்கிறார்கள்.
பெரிய முதலீட்டில் எடுக்கப்பட்டுள்ள படம் என்பதால், 600 கோடி ரூபாய் வரை மொத்த வசூல் எடுத்தால் மட்டுமே படம் நஷ்டமின்றி தப்பிக்க முடியும் என்கிறார்கள் தெலுங்கு திரையுலகில். ஆகவே, வரும் நாட்களில் மேலும் படத்தினை விளம்பரப்படுத்த திட்டமிட்டு வருகிறது படக்குழு.
+ There are no comments
Add yours