சென்னை: ரஜினி நடித்துள்ள ‘வேட்டையன்’ படத்தில் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. டீசர் எப்படி? – தொடக்கத்தில் காவல் துறை அதிகாரிகள் குழுமியிருக்கும் அறையில், சில காவலர்கள் புகைப்படங்கள் போட்டுக் காட்டப்படுகின்றன. அவர்கள் யார் என கேட்கும்போது, ‘என்கவுன்டர்’ ஸ்பெஷலிஸ்ட் என்கின்றனர். “ஆபத்தான குற்றவாளிகளை என்கவுன்டர் செய்ததால் இவர்கள் ஹீரோவாகிவிட்டார்கள்” என்கிறார் ரித்திகா சிங். தொடர்ந்து ரஜினியின் இன்ட்ரோ காட்டப்படுகிறது. ரஜினி குறித்த இன்ட்ரோவில், “நமக்கு தான் எஸ்பிங்குற பேர்ல எமன் வந்துருக்காம்ல” என குற்றவாளிகள் மிரள்கின்றனர். காவல் துறை அதிகாரியான ரஜினி என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்.
துப்பாக்கியும் கையுமாக மாஸ் காட்டுகிறார் ரஜினி. அமிதாப் பச்சனுக்கு பிரகாஷ் ராஜ் குரல் கொடுத்துள்ளார். டீசரில் குரல் மட்டும் தனித்து தெரிகிறது. “என்கவுன்டர் பேர்ல கொல பண்றது தான் ஹீரோயிசமா?” என அமிதாப் கேள்வி எழுப்புகிறார். அதற்கு பதிலளிக்கும் விதமாக “என்கவுன்டர்ங்குறது குற்றம் செஞ்சவங்களுக்கு கொடுக்குற தண்டனை மட்டுமில்ல. இனிமே இப்படி நடக்க கூடாதுங்குறதுக்காக எடுக்குற முன்னெச்சரிக்கை நடவடிக்கை” என விளக்கம் கொடுக்கிறார் ரஜினி. ஆக, படம் என்கவுன்டர் குறித்த முழுமையாக பேசும் என தெரிகிறது. ஆனால் ஆதரவா, எதிர்ப்பா என்பது குறித்து பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ரஜினியின் ‘வேட்டையன்’ படத்தை த.செ.ஞானவேல் இயக்கியுள்ளார். படம் அக்டோபர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அனிருத் இசையமைத்துள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. அமிதாப் பச்சன், ராணா, ஃபகத் பாசில், துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
+ There are no comments
Add yours