மதுரை: கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘இந்தியன் – 2’ படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரிய மனுவை மதுரை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மதுரை எச்.எம்.எஸ்.காலனியை சேர்ந்த ராஜேந்திரன், மதுரை மாவட்ட 4-வது முன்சீப் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: “மதுரையில் கடந்த 55 ஆண்டுகளாக வர்மக்கலை பயிற்சி அளித்து வருகிறேன். கடந்த 1996-ம் ஆண்டு வெளியான ‘இந்தியன்’ சினிமாவுக்காக நடிகர் கமல்ஹாசனுக்கு படப்பிடிப்பு தளத்தில் வர்ம கலைகளை கற்றுக் கொடுத்தேன்.
எழுத்தாளர் சுஜாதா மற்றும் ஷங்கர் ஆகியோர் கதைக்கு தேவையான இடங்களில் வர்மக் கலை சம்பந்தமான சண்டை முறைகளையும், அது தொடர்பான அறிவியல் பூர்வமான விளக்கங்களையும் கேட்டு தெரிந்து கொண்டனர். அவர்களுக்கு வர்மக் கலையை செய்து காட்டினேன். படபிடிப்பின் போது வர்ம சண்டை காட்சிகளை அமைத்து கொடுத்தேன். இதனால் படத்தின் டைட்டில் கார்டில் எனது பெயர் சேர்க்கப்பட்டது.
‘இந்தியன்’ படத்தில் வர்மக்கலை சண்டைக் காட்சிகளில் நான் பயன்படுத்திய முத்திரைகள் அனைத்தும், எனது ‘தொடு வர்மம் 96’ என்ற புத்தகத்தில் இடம் பெற்ற முத்திரைகளை பயன்படுத்தி காட்சிப்படுத்தினார்கள். இதற்கு முன்பு வர்ம முத்திரை படங்கள் வேறு எந்த புத்தகத்திலும் வந்தது இல்லை.
இந்நிலையில் ‘இந்தியன் – 2’ படத்தின் போஸ்டர்களில் நான் ஏற்கெனவே சொல்லி கொடுத்த முத்திரை பயன்படுத்தப்பட்டுள்ளது. என் அனுமதி இல்லாமல் இந்தியன்-2 படத்தில் வர்மக் கலை முத்திரையை பயன்படுத்தி உள்ளனர். அதற்கு என்னிடம் அனுமதி பெற வேண்டும். என் பெயரை டைட்டில் கார்டில் சேர்க்க வேண்டும் என படக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பியும் பதில் இல்லை. எனவே, எனது கோரிக்கை நிறைவேறும் வரை ‘இந்தியன் – 2’ படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்” என அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி செல்வ மகேஸ்வரி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இயக்குநர் ஷங்கர் தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், “வர்மக் கலை உலகளாவிய கலை. அதற்கு குறிப்பிட்ட நபர் யாரும் உரிமை கோர முடியாது. ‘இந்தியன்-2’ படத்தை வர்மக்கலையை தழுவி எடுக்கவில்லை. ஊழலுக்கு எதிரான சினிமாவாக தயாராகி இருக்கிறது. இந்தியன்-2 படத்துக்கு தடை கோர மனுதாரருக்கு அதிகாரம் இல்லை. இந்த படத்தின் டிக்கெட் உலகம் முழுவதும் விற்கப்பட்டுவிட்டது” என்றார்.
தயாரிப்பாளர் தரப்பில்,“மனுதாரர் ராஜேந்திரனுக்கும், ‘இந்தியன்-2’ படத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. சினிமா தொடர்பான வணிக பிரச்சினை குறித்து இந்த நீதிமன்றம் விசாரிக்க முடியாது” என தெரிவிக்கப்பட்டது. விசாரணை முடிவில், ‘இந்தியன்-2’ படத்தை வெளியிட தடை இல்லை. இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதி உத்தரவிட்டார்.
+ There are no comments
Add yours