பாலகிருஷ்ணா மகனின் அறிமுகம் படம் குறித்த வதந்திகளுக்கு படக்குழுவினர் விளக்கமளித்துள்ளனர்.
தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவின் மகன் நந்தமுரி மோக்ஷக்னா நாயகனாக அறிமுகமாக உள்ளார். இப்படத்தினை பிரசாந்த் வர்மா இயக்கவுள்ளார். சில நாட்களாகவே இப்படத்தில் இருந்து பிரசாந்த் வர்மா விலகி விட்டார் எனவும், அவருக்கு பதில் நாக் அஸ்வின் இயக்கவுள்ளார் என்றும் தகவல் பரவியது.
இதற்கு படக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர். அதில் “எங்கள் படம் தொடர்பாக சில ஆதாரமற்ற வதந்திகள் வெளியாகியுள்ளன. அவை உண்மையல்ல என்று உறுதியளிக்கிறோம். எங்களது திட்டம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் சரியான நேரத்தில் கூறுவோம்” என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் பூஜை நடைபெறுவதாக இருந்தது. அதனை நந்தமுரி மோக்ஷக்னாவுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தள்ளிவைத்துவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தினை லெஜண்ட் புரொடக்ஷன் மற்றும் எஸ்எல்வி சினிமாஸ் தயாரிக்கிறது.
+ There are no comments
Add yours