சென்னை: ‘வாழை’ வெகுஜன சினிமாவுக்கு பக்கத்தில் இருப்பதால் தான், இவ்வளவு வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் ‘கொட்டுக்காளி’ ஒரு ஃபெஸ்டிவல் திரைப்படம். இந்த படத்தை நான் தயாரித்திருந்தால், இதை தியேட்டருக்கே கொண்டு வந்திருக்க மாட்டேன் என்று இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.
கொடைக்கானல் மலைப்பகுதியில் அமைந்துள்ள ‘வெள்ளக்கெவி’ கிராமத்தைச் சுற்றி, அந்தப் பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களின் வாழ்க்கையை மையப்படுத்தி நிஜமான சம்பவங்களின் பின்னணியில் உருவாகியுள்ள படம் ‘கெவி’. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது.
இதில் இயக்குநர் அமீர் கலந்துகொண்டு பேசியதாவது, “ஒரு திரைப்படம் என்பது பார்ப்பவர்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். படப்பிடிப்பு தளத்தில் நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டோம், பல வேதனைகளை அனுபவித்தோம் என்று சொல்வதால் மட்டும் பார்வையாளர்களுக்கு தாக்கத்தை கடத்தி விடாது. அந்த திரைப்படம் அதை கடத்தியதா என்பதுதான் மிகவும் முக்கியம்.
நம் அனைவருக்குமே வாச்சாத்தி சம்பவம் குறித்து தெரியும். 18 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட ஒரு கொடுமை அது. அதை மையப்படுத்தி ஒரு படம் வந்தது. ஆனால் அந்தப் படத்தை உட்கார்ந்து பார்க்க முடியாது. போரடிக்கும். அந்த வலியை நம்மால் உணரவே முடியாது.
‘வாழை’ வெகுஜன சினிமாவுக்கு பக்கத்தில் இருப்பதால் தான், இவ்வளவு வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் ‘கொட்டுக்காளி’ ஒரு ஃபெஸ்டிவல் திரைப்படம். அது வெகுஜன படம் கிடையாது. அதற்காக அது நல்ல படம் இல்லை என்று சொல்லவில்லை. ஒரு திரைப்படவிழா மனநிலைக்காக தயாரிக்கப்பட்ட ஒரு படத்தை, பல சர்வதேச விருதுகளை பெற்ற ஒரு படத்தை, இங்கே கொண்டு வந்து ஒரு வெகுஜன சினிமாவுடன் போட்டிப் போட வைப்பதே ஒரு வன்முறைதான். அது எனக்கு ஏற்புடையதாக இல்லை.
அப்படி செய்யும்போது பல சர்வதேச விருதுகள் வென்ற ஒரு இயக்குநரை, இங்கே ரூ.150 கொடுத்து படம் பார்த்தவர்கள் ‘என்னங்க.. படமா எடுத்து வச்சிருக்காங்க?’ என்று திட்டுவதை பார்க்கமுடிகிறது. என்னை பொறுத்தவரை இந்த படத்தை நான் தயாரித்திருந்தால், நான் இதை தியேட்டருக்கே கொண்டு வந்திருக்க மாட்டேன். அதை வணிக நோக்கத்தில் கொண்டு வந்து திணிக்க வேண்டிய அவசியம் இல்லை.
படத்தின் தயாரிப்பாளர் ஒரு பிரபல நடிகராக இருக்கிறார். தன்னுடைய செல்வாக்கை வைத்து ஏதேனும் ஒரு ஓடிடி தளத்தில் அப்படத்தை விற்றிருக்க வேண்டும்” இவ்வாறு அமீர் தெரிவித்தார்.
+ There are no comments
Add yours